திருப்பரங்குன்றம் விவகாரம் தனி நீதிபதியின் விசாரணைக்கு உகந்தது அல்ல தீபம் ஏற்றுவதற்கான வழக்கா? சொத்துரிமைக்கான வழக்கா..? ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தனி நீதிபதியின் விசாரணைக்கு உகந்தது அல்ல. இது தீபம் ஏற்றுவதற்கான வழக்கா? சொத்துரிமைக்கான வழக்கா என அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகே தீபம் ஏற்ற வேண்டுமென்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து மதுரை கலெக்டர் மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் 5வது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வீடியோ கான்பரன்சில் ஆஜராகி வாதிட்டதாவது:
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது ஏற்புடையதல்ல. தனி நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நில அளவைத்துறை, வருவாய்த்துறையினர் ஆய்வு செய்ததில், இதுபோன்ற பல்வேறு தூண்கள் தமிழ்நாட்டில் மலைகளில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகளவில் இதேபோல் தூண்கள் உள்ளன. இவை தீபத்தூண்என்பதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை. எனவே, அது தீபத்தூண் இல்லை.

நெல்லித்தோப்பு அருகே உள்ள படிக்கட்டுகள் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தான் செல்கிறது என்ற கூற்று ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. 1920ம் ஆண்டு உத்தரவில், மாவட்ட நீதிபதி முழு மலையையும் ஆய்வு செய்ததாகவும், மலையின் உச்சியில் உள்ள ஒரே கட்டிடமாக தர்கா மட்டுமே உள்ளது எனவும் கூறி உள்ளார். எனவே, உறுதியான ஆவணமின்றி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1920ல் தனி நீதிபதி ஆய்வுக்கு சென்றபோது அங்கு தீபத்தூண் இருந்திருந்தால் அது குறித்து உத்தரவில் குறிப்பிட்டு இருப்பார்.
எங்களுடைய கேள்வி, அங்கே உள்ள தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்பது தான். தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரிய, பழக்க வழக்கம் என்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. அது தீபத்தூண் இல்லை என்பது தான் எங்களுடைய வாதம். கோயில் நிர்வாக அதிகாரி சட்டப்படி தான் மனுதாரரின் மனுவை நிராகரித்துள்ளார். இதில் எந்தவிதமான விதிமீறலும் இல்லை. கோயில் நிர்வாகத்தின் முடிவில் தனிநபர் எவ்வாறு தலையிட முடியும்? முழுக்க முழுக்க திருப்பரங்குன்றத்தில் கோயில் சட்ட விதிகளின்படியே தீபமேற்றப்படுகிறது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில், கோயில் அடிப்படை சட்டம் உள்ளது. ஆனால், மனுதாரர் தீபமேற்ற எந்த சட்டப்படி தனி நீதிபதி உத்தரவிட்டார்? தனி நீதிபதி அது தீபத்தூண் என குறிப்பிட ஆதாரங்களை சரி பார்த்தாரா? எதன் அடிப்படையில் அதை தீபத்தூண் என குறிப்பிட்டார் என தெரியவில்லை. கோயில் ஆணையருக்கு இதுபோன்ற பழக்க வழக்கங்களை தீர்மானிப்பதற்கு அதிகாரம் உள்ளது என்பதற்கான ஒரு மிகச்சிறந்த வழக்கு இது. இந்த வழக்கு தனி நீதிபதியின் விசாரணைக்கு உகந்தது அல்ல என்பது தான் எங்களது உறுதியான வாதம். எனவே, தனி நீதிபதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது தவறு. இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை. அந்தத் தூண் பல ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்’’ இவ்வாறு வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், ‘‘அந்த தூண் எத்தனை ஆண்டுகள் பழமையானது’’ என்றனர். இதற்கு, ‘‘எத்தனை ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவில்லை’’ என அரசு தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து பி.எஸ்.ராமன் வாதிடுகையில், ‘‘மனுதாரர் இந்த வழக்கில் பக்தராக வரவில்லை. சொத்தில் உரிமை கேட்பது போல் வந்துள்ளார். இந்த வழக்கில் புதிய பழக்கத்தை உருவாக்கி அதன் மூலம் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனி நீதிபதி தனது உத்தரவில், ஏற்கனவே உள்ள பழக்க வழக்கப்படி மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும், அதற்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே மலை உச்சியில் தீபம் ஏற்றியதற்கான ஏதேனும் ஆதாரம் உள்ளதா? உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதே கேள்வி. அரசியலமைப்பு சட்டத்தின் 226வது பிரிவை வைத்து இந்த உரிமையை கேட்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். இதெல்லாம் பார்க்கும்போது இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை’’ என்றார்.

மனுதாரர் ராம.ரவிக்குமார் மற்றும் அரசபாண்டியன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, ‘‘மனுதாரர்களின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்பதை ஏற்க முடியாது’’ என்றார். தர்கா தரப்பின் மூத்த வழக்கறிஞர் மோகன் வாதிடும்போது, ‘‘தனி நீதிபதி தனது விசாரணையின் போது எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய வேண்டியதே இல்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘தனி நீதிபதியின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவை எதிர்த்த அனைத்து மனுக்களின் மீதான விசாரணை ஜன. 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிது’’ என உத்தரவிட்டு, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: