சென்னை: மாமல்லபுரம் அருகே, எல்லைக்கல் நட்டு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற சுமார் ரூ.250 கோடி நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. மாமல்லபுரம் அடுத்த கோவளம், நெம்மேலி, சூளேரிக்காடு, பட்டிப்புலம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1054 ஏக்கர் நிலம் உள்ளது. சமீப காலமாக ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் மீனவர் பகுதிக்கு அருகே, ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை மர்ம கும்பல் ஒன்று எல்லை கல் நட்டு ஆக்கிரமிப்பு செய்வதாக ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் செல்வகுமாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், அறக்கட்டளை ஊழியர்கள் பட்டிப்புலம் சென்று பார்த்த போது, சிலர் எல்லைக்கல் நட்டு ஆக்கிரமிக்க முயன்றனர்.
இதையடுத்து, அந்த மர்ம கும்பல் கற்களை போட்டுவிட்டு அவசர அவசரமாக தப்பி ஓடினர். பின்னர், சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டு, எல்லை கற்களை பறிமுதல் செய்தனர். பின்னர், இனி அத்துமீறி ஆளவந்தார் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சடிக்கப்பட்ட பெயர் பலகையை அமைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.250 கோடி இருக்கும் என ஆளவந்தார் அறக்கட்டளையினர் தெரிவித்தனர். மாமல்லபுரம் அருகே ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான சுமார் ரூ.250 கோடி மதிப்புள்ள நிலத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
