சென்னை: தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. காற்று, நீர், நிலம் மாசு ஏற்படுத்துவதாகக் கூறி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து 2020ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், பசுமை தாமிரம் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரி தமிழக தொழில்துறை, சுற்றுச்சூழல் துறை செயலாளர்களுக்கு, கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை ஆறு மனுக்கள் அனுப்பியும் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எங்கள் நிறுவனத்தின் மனுக்களை பரிசீலிக்குமாறு, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசுகட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் இ.விஜய் ஆனந்த் ஆஜராகி, பசுமை தாமிர ஆலை அமைப்பது தொடர்பாக அரசுத்துறை செயலாளர்களுக்கு மட்டுமே மனு அனுப்பப்பட்டுள்ளது. முறையாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பிக்கவில்லை. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருந்து அபாயகரமான கழிவுகளை அப்புறப்படுத்தக் கோரிய வழக்கு நிலுவையில் உள்ளன என்று தெரிவித்தார். இதையடுத்து, நிலுவையில் உள்ள வழக்குடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
