வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம்; சென்னையில் 3 விமானம் ரத்து: பல விமானங்கள் தாமதம்

சென்னை: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 3 விமானம் நேற்று ரத்து செய்யப்பட்டன. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், தொடர்ந்து பல மணி நேரம் காலதாமதம், விமானங்கள் ரத்து போன்றவைகள் ஏற்படுகின்றன.

இந்தநிலை நேற்றும் தொடர்ந்தது. சென்னையில் இருந்து நேற்று பகல் 12 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 5.20 மணிக்கு வாரணாசி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு வாரணாசியில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானம் ரத்து செய்யப்பட்டன.

மேலும் டெல்லி, செகந்திராபாத், சிலிகுரி, ஐதராபாத், அந்தமான் ஆகிய 7 புறப்பாடு விமானங்கள், டெல்லி, அந்தமான், கொல்கத்தா, ஐதராபாத், சிலிகுரி ஆகிய 5 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Related Stories: