சென்னை: மதி அங்காடியின் பண்டிகை கால விற்பனை கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார். சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெறும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட மதி கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் விற்பனை கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மதி அனுபவ அங்காடியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வாடிக்கையாளர் அட்டைகளை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாவட்டத்திலும், சிறப்பான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யக்கூடிய குழுக்கள் பங்குபெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு, கண்காட்சி இங்கு நடத்தப்படும். அந்த கண்காட்சி இங்கே திறந்து வைக்கப்படுகிறது.
ஜனவரி 4ம் தேதி வரைக்கும் கிட்டத்தட்ட 18 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும். இதில் 72 சுய உதவிக்குழுக்களைக் கொண்டு 50 கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. விற்பனைக்காக ரூ.1 கோடி மேற்பட்ட பொருட்கள் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் மூலம் இங்கே காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வருடம் எங்களுக்கு முதலமைச்சர் கொடுத்திருக்கக்கூடிய இலக்கு ரூ.600 கோடி. இதற்கு முந்தைய வருடம் கிட்டத்தட்ட ரூ.500 கோடி விற்பனை செய்திருந்தோம். இந்த ஆண்டு இதுவரைக்கும் கிட்டத்தட்ட ரூ.690 கோடி விற்பனை ஏற்கனவே நடந்து முடிந்திருக்கிறது. 50 லட்சம் சுய உதவிக்குழு சகோதரிகளில், கிட்டத்தட்ட 22 லட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது.
