விபத்து, மயக்கம், காயம், வலிப்பு, அத்துமீறல்: அடங்காத ரசிகர்கள்…. தொடரும் அசம்பாவிதங்கள்….

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜய் நேற்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் சென்றபோது ரசிகர்கள் அவரை பைக் மற்றும் காரில் பின்தொடர்ந்தனர். வழக்கம்போல் அவரது காருடன் போட்டிபோட்டு செல்ல முயன்றனர். ‘என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்கறாங்க…’ என கூறிய போலீசார் அவர்களை மடக்கிபிடித்து நிறுத்தினர். பகல் 12 மணியளவில் விஜய் கூட்டத்திற்கு வந்து பேச தொடங்கினார். அப்போது வெயில் கொளுத்தியதால் கூட்டத்தில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் என 10க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மருத்துவ குழுவினர் அவர்களை மீட்டு சிகிச்சை அளித்தனர். இளைஞர் ஒருவருக்கு வலிப்பு வந்ததையடுத்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மைதானத்தில் 60க்கும் மேற்பட்ட இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில், பெண்கள், மூதாட்டிகள், இளைஞர்கள் ஏறி குதித்தும், தடுப்புகளுக்குள் நுழைந்தும் சென்றனர். விஜய் பேசும்போது, தொண்டர்களும், இளைஞர்களும் அருகருகே இருந்த வாகனங்கள் மீது ஏறி நின்றனர். விஜய் கட்சியினர் அத்துமீறி கட்அவுட், கம்பங்களில் ஏறுவார்கள் என்பதால் அங்கிருந்த கம்பங்கள், மரங்கள், இரும்பு தடுப்புகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரசார கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு வாலிபர் அங்கு இருந்த 30 அடி உயர ஸ்பீக்கர் கம்பத்தில் ஏறி, உச்சியில் நின்று விஜய்யிடம் முத்தம் கேட்டார். விஜய் ‘தம்பி ப்ளீஸ் இறங்குப்பா’ என்று மைக்கில் கூறி, இறங்கினால் முத்தம் தருகிறேன் என கெஞ்சிய பிறகு இறங்கினார். உடனே கட்சியின் பாதுகாவலர்கள், கம்பத்தில் ஏறிய வாலிபரின் கன்னத்தில் பளார் பளார் என அறை விட்டனர். முன்னதாக புஸ்ஸி ஆனந்த் வந்தபோது அவரது கன்னத்தை கிள்ளி இவர் முத்தம் கொடுத்துள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்க பாஸ், கியூஆர் கோடு இல்லை என்று செங்கோட்டையன் கூறிய போதிலும் விவிஐபி பாஸ் வழங்கி தனி வழியில் அனுப்பியதால் பலரும் அதிருப்தி அடைந்தனர். கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள் யாரும் வர வேண்டாம் என காவல் துறை அறிவுறுத்தியும் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் அழைத்து வந்திருந்தனர். கூட்டத்தினருக்கு விநியோகம் செய்வதற்காக இரும்பு தடுப்புகளில் வைக்கப்பட்டு இருந்து 5க்கும் மேற்பட்ட வாட்டர் பாட்டில் பண்டல்ளை ரசிகர்கள் நைசாக தோளில் வைத்து தூக்கி சென்றனர். இதனால் குடிநீர் கிடைக்காமல் வெயிலில் பலரும் தவித்தனர்.

கூட்டம் முடிந்து காரில் விஜய் கோவை புறப்பட்ட போதும் அவர் பின்னால் அதிவேகமாக டூவீலர்களில் தொண்டர்கள் சென்றனர். திருப்பூர் மாவட்ட எல்லையான பல்லக்கவுண்டம்பாளையம் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் 20க்கும் மேற்பட்ட டூவீலர்களில் ரேஸ் சென்றவர்கள் விஜய் கார் பின்னால் வந்த கார் திடீரென பிரேக் போட்டதால் 4க்கும் மேற்பட்ட டூவீலர்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆங்காங்கே விதிகளை மீறி எதிர்ப்புற சாலைகளில் தவெகவினர் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காவல்துறைக்கு விஜய் நன்றி
ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்து நேற்று மாலை சென்னை திரும்பியதும் த.வெ.க தலைவர் விஜய், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த சந்திப்பை, மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் இடத்தை பிடிக்க நினைத்தால் ஏமாற்றம்தான்: அதிமுக திடீர் வாய்ஸ்
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை நேற்று அளித்த பேட்டி: பாரம்பரியமாக உள்ள ஒரு அரசியல் கட்சியில் உள்ள தலைவர்களை விஜய் ஏன் சொந்தம் கொண்டாடுகிறார்? எந்த நிலையிலும் தவெக தலைவர் விஜய், எங்களுடைய இடத்தை பிடிக்க நினைத்தால் ஏமாந்துதான் போவார்.
மக்கள் அவரை இன்னும் நடிகராகத்தான் பார்க்கிறார்கள். அரசியல் தலைவராக நினைக்கவில்லை. அரசியலில் விஜய் ஒரு கைக்குழந்தை. வரும் தேர்தலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விஜய் வருகை தாக்கம் அல்ல, தாகம் தான்… அமைச்சர் கலாய்
கோவை, டிச. 19: கோவை விமான நிலையத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட் டி: விஜய் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2026ல் திமுக தான் ஆட்சி அமைக்கும். இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். விஜய்யின் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தாகத்தை தான் ஏற்படுத்தும். அதற்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுகவையும் மறக்கல… குனியிற பழக்கமும் இன்னும் போகல… தவெகவிலும் மரியாதை இல்ல…
விஜய் பேசி முடித்ததும், அவருக்கு தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் ஆளுயர வெள்ளி செங்கோல் நினைவுப்பரிசு வழங்கினார். அதை விஜய் தனது வலது கையில் தூக்கிப்பிடித்து, கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் காண்பித்தார். பின்னர், செங்கோட்டையனுக்கு நன்றி தெரிவித்தார். அவர், ஜெயலலிதாவிடம் குனிந்து, குனிந்து பேசுவதுபோல், விஜய்யிடமும் குனிந்து, பதிலுக்கு நன்றி தெரிவித்தார். தவெகவில் இணைந்த பின்பும் ஜெயலலிதா படத்துடன் வலம் வரும் செங்கோட்டையன், நேற்றும் அதே பாணியில் வலம் வந்தார்.

பாக்கெட்டில் ஜெயலலிதா படம், தவெக கரை வேட்டி என காமெடி பண்ணும் செங்கோட்டையன் செயலுக்கு ஒரு எண்டே இல்லையா என நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர். நேற்று நடந்த கூட்டத்துக்கு வருகை தந்த விஜய்யை செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது, அங்கிருந்தவர்கள் செங்கோட்டையனை தள்ளிவிட்டனர். கீழே விழ சென்ற செங்கோட்டையனை விஜய்யின் பவுன்சிலர் ஒருவர் பிடித்ததால் உயிர் தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்க்கு தாடி பாலாஜி ‘டாடா’
நடிகர் விஜய் தவெக துவங்கியதும் நடிகர் தாடி பாலாஜி அதில் சேர்ந்தார். விஜய்யின் உருவத்தை டாட்டூவாக நெஞ்சில் குத்தி, வீடியோவாக வெளியிட்டு இருந்தார். தவெக தொடங்கிய 2ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு புதிய பொறுப்பாளர்களை விஜய் அறிவித்தார். அதில் தாடி பாலாஜிக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும், தவெக சார்பில் நடந்த கூட்டங்களுக்கு தாடி பாலாஜிக்கு அழைப்பு விடுக்காமல் ஓரங்கட்டப்பட்டார். இதனால் அதிருப்தியில் இருந்த தாடி பாலாஜி, புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன் லட்சிய ஜனநாயக கட்சியை தொடங்கிய லாட்டரி அதிபர் மகன் ஜோஸ் சார்லஸை நேற்று சந்தித்து, அவரது கட்சியில் இணைந்தார்.

Related Stories: