சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அச்சங்கத்தின் தலைவர் சசிகலா தலைமையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின் நிருபர்களிடம் கூறியதாவது:
எம்.ஆர்.பி. செவிலியர்கள் 2 ஆண்டுகள் தொகுப்பூதிய முறையில் பணி செய்த பின்னர் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என கடந்த 2015ம் ஆண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள். கடந்த ஆட்சி காலத்தில் எங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்கள் போராட்டங்களில் கலந்துகொண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என கூறினார். ஆனால் தி.மு.க. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது.
8 ஆயிரம் செவிலியர்கள் இதுவரை தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நிலை உள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது வேதனையளிக்கிறது. அரசு மருத்துவமனைகளில் புதிதாக செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் உள்ளது. குறைந்தது சுமார் 10 ஆயிரம் பணியிடங்களை உருவாக்க வேண்டிய தேவை அரசு மருத்துவமனையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
