தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூன் 26: தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற 1433ம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற குடிகள் மாநாடு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பு பசலி 1433 வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றையதினம் ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில், ஆவுடையார்கோவில் சரகத்திற்குட்பட்ட குடிக்காடு, செல்வனேந்தல், பட்டமுடையான், கள்ளக்காத்தான், எசமங்களம், சிவஞானபுரம், புதுவாக்காடு, வலையன்வயல், கண்டையன்கோட்டை, மாகாளியேந்தல், வேதினிவயல், முதுவளர்குடி, வெளிவயல், கீழ்க்குடி, புத்துவயல், உக்கடை சுப்பிரமணியபுரம், பூவளுர், உக்கடைபவானி அம்பாள்புரம், வடவயல், பிராந்தனி ஆகிய வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்வில் கிராம கணக்குகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, 1433ம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்றையதினம் நடைபெற்ற குடிகள் மாநாடு நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 11 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகைக்கான காசோலைகள், வீட்டுமனைப் பட்டாவிற்கான ஆணைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. எனவே தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன், ஆவுடையார்கோவில் தாசில்ாதர் மார்டின் லூதர்கிங், தனி தாசில்தார் ராஜேஸ்வரி, அனைத்து வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்: கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: