வி.கே.புரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

விகேபுரம், ஜூன் 25: வி.கே.புரம் அருகே கோடாரங்குளத்தில் மின்சாரம் பாய்ந்ததில் கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். நெல்லை மாவட்டம், வி.கே.புரம் அருகேயுள்ள கோடாரங்குளம் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்த சிவனுவின் மகன் மாரியப்பன் (45). கூலி தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. தம்பதிக்கு சிவசுடலை என்ற மகனும் சிவரஞ்சினி என்ற மகளும் உள்ளனர். இதனிடையே வழக்கம்போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று திரும்பிய மாரியப்பன், இரவு தனக்கு அருகே மின்விசிறியை வைத்துக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் மாரியப்பன் எழுந்திருக்கவே இல்லை. இதனால் பதறிய அவரது மனைவி விஜயலட்சுமி, அவரை தொட்டு எழுப்பியபோது மாரியப்பன் தூக்கத்திலேயே இறந்துக் கிடந்தது தெரியவந்தது. அத்துடன் அவரை தொட்டு எழுப்பியபோது விஜயலட்சுமிக்கு கரண்ட் ஷாக் அடித்துள்ளது. மேலும் ஏற்கனவே பழுதான மின்விசிறியில் இருந்து கசிந்த மின்சாரம் மாரியப்பனின் உடலில் பாய்ந்ததால் அவர் உடனடியாக இறந்ததும் தெரியவந்தது. தகவலறிந்து விரைந்துவந்த வி.கே.புரம் போலீசார், மாரியப்பனின் உடலை கைப்பற்றி அம்பை. அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

The post வி.கே.புரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: