அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் ஆந்திர வாலிபர் சுட்டுக்கொலை

திருமலை: அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆந்திர வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்து குடும்பத்தினர் கதறி அழும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், கர்லாபாலம் மண்டலம் யாஜளி கிராமத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணா(32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கோபிகிருஷ்ணா தனது குடும்பத்தை காப்பாற்றவும், வாழ்வாதாரத்திற்காகவும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். அங்கு ஆர்கன்சாஸில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கோபிகிருஷ்ணா கவுண்டரில் இருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர் நேரடியாக வந்து அவரை துப்பாக்கியால் சுட்டார். இதில் பலத்த காயங்களுடன் கோபிகிருஷ்ணா சுருண்டு விழுந்தார்.

பின்னர் மர்ம நபர் அங்கிருந்த ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோபிகிருஷ்ணா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். மறுபுறம், தாக்குதல் நடத்தியவர் சுடும் காட்சிகள் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் அங்குள்ள போலீசார் மர்ம நபரை பிடிக்க விசாரித்து வருகின்றனர்.

The post அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் ஆந்திர வாலிபர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: