இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்க வெளியுறவு துறை குற்றச்சாட்டு

வாஷிங்டன்: இந்தியாவில் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு, வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்களை இடிப்பது உள்ளிட்டவை அதிகரித்துள்ளதாக வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் சர்வதேச மத சுதந்திரம் குறித்து ஆண்டு அறிக்கை வௌியிடப்பட்டது. இதில் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியிருப்பதாவது:

2023ம் ஆண்டில் இந்தியாவில் மத சுதந்திரம் குறித்த பிரச்னைகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் அமெரிக்கா கவலை தெரிவித்தது. இந்தியாவில் மத மாற்ற எதிர்ப்பு சட்டங்கள், வெறுப்பு பேச்சுக்கள், சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுவது அதிகரித்து வருகின்றது. அதே நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மக்கள் மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இந்தியாவில் 28 மாநிலங்களில் 10 மாநிலங்கள் மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டங்களை கொண்டுள்ளன. இந்த மாநிலங்களில் திருமண நோக்கத்திற்காக கட்டாய மத மாற்றங்களுக்கு எதிராக அபராதங்கள் விதிக்கப்படுகின்றது. கட்டாய மத மாற்றங்களை தடை செய்யும் சட்டங்களின் கீழ் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்.

சில நேரங்களில் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களை துன்புறுத்தி, பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையிலும் இந்தியாவுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்க வெளியுறவு துறை குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: