குன்னூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கடத்திய தாய், தந்தை உட்பட 6 பேர் கைது

*மேலும் ஒருவருக்கு தனிப்படை வலைவீச்சு

ஊட்டி : குன்னூரில், காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கடத்திய வழக்கில் பெண்ணின் தாய், தந்தை உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஒருவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்தவர் கவின்குமார் (24). கார் டிரைவர். கவின்குமாரும், எடப்பள்ளி பகுதியை சேர்ந்த ரோஷினி (24) என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்த நிலையில், பெண்ணின் பெற்றோர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பின்னர் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில், பெண்ணை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஏப்ரல் 26ம் தேதி கவின்குமார் மற்றும் ரோஷினி ஆகியோரை அழைத்து வெலிங்டன் காவல்துறையினர் விசாரித்தனர்.

அப்போது, ரோஷினி தனது கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து அவருடன் அனுப்பி வைத்தனர். தம்பதி, அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு பெண்ணின் உறவினர்கள் சிலர் கவின்குமார் வீட்டுக்கு வந்து ஆபாச வார்த்தைகளால் பேசி கவின்குமார், அவருடைய தாயார் மற்றும் சகோதரி ஆகியோரை தாக்கி விட்டு வலுக்கட்டாயமாக ரோஷினியை தங்களுடன் அழைத்து சென்று விட்டனர்.

இதுகுறித்து கவின்குமார் அளித்த புகாரின் பேரில் அருவங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமாரின் மனைவி ரோஷினியை தேடி வந்தனர். மேலும் ரோஷினியின் பெற்றோர் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதற்கிடையே ரோஷினியின் தந்தை கோபாலகிருஷ்ணன், அவரை ஓசூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, தனிப்படை போலீசார், உடனடியாக ஓசூர் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த ரோஷினியை மீட்டனர். இதையடுத்து ரோஷினியை கடத்தி சென்றதாக அவருடைய தாய் சாந்தி, தந்தை கோபாலகிருஷ்ணன் உட்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவான ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post குன்னூரில் காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை கடத்திய தாய், தந்தை உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: