கட்டையால் தாக்கி மனைவி கொலை போதை கணவன் கைது காட்பாடியில் பயங்கரம்

வேலூர், ஜூன் 9: காட்பாடியில் மதுபோதையில் வந்த கணவன், மனைவியை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியை சேர்ந்தவர் ராமு(44). இவரது மனைவி ராதா(38). கூலிகளான இவர்கள் எங்கு கூலி வேலை கிடைக்குமோ அங்கு சென்று தங்கி வேலை செய்து வருவார்களாம். கடந்த சில நாட்களாக பள்ளிக்குப்பம் டாஸ்மாக் கடை பின்புறம் வீடு கட்டும் பணிக்காக அங்கு தங்கியிருந்துள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் மதுப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று இரவும் கணவன், மனைவி இருவரும் மது போைதயில் இருந்துள்ளனர்.

அப்போது மழை தூறல் விழவே அங்கிருந்த ராதிகா என்பவரது வீட்டின் வராண்டாவில் ஒதுங்கியுள்ளனர். அப்போது ராமு மனைவி ராதாவிடம் சாப்பாடு போடும்படி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ராமு அருகில் இருந்த ரீப்பர் கட்டையை எடுத்து ராதாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் மண்டை பிளந்து ராதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். மதுபோதையில் தன்னால் கட்டையால் தாக்கப்பட்ட மனைவி இறந்ததும் அதிர்ச்சியடைந்த ராமு அங்கிருந்து தப்பி சென்றார். சம்பவம் குறித்து அறிந்ததும் காட்பாடி டிஎஸ்பி சரவணன், இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்து விட்டு தப்பியோடி புதரில் மறைந்திருந்த கணவன் ராமுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கட்டையால் தாக்கி மனைவி கொலை போதை கணவன் கைது காட்பாடியில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: