ரயிலில் 28 கி.மீ. தூரம் இழுத்து வரப்பட்ட வாலிபர் சடலம்: காட்பாடியில் பயணிகள் அலறல்

வேலூர், ஜூன் 18: வாலாஜா ரோடு ரயில் நிலையம் அருகில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கிய வாலிபர் சடலமாக காட்பாடி ரயில் நிலையம் வரை 28 கி.மீ. தூரம் இழுத்து வரப்பட்டார். காட்பாடியில் இதைப்பார்த்து பயணிகள் அலறி கூச்சலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தை நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கடந்தது, முகுந்தராயபுரம் ரயில் நிலையத்தை ரயில் நெருங்கிய போது, ரயில் வருவது தெரியாமல் தண்டவாளத்தை திடீரென கடந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரயிலில் சிக்கினார். அவர் ரயில் இன்ஜின் முகப்பில் சிக்கி பலத்த காயமடைந்து இறந்தார். வாலிபரின் சடலம் ரயில் இன்ஜினில் சிக்கி காட்பாடி ரயில் நிலையம் வரை 28 கி.மீ. தூரம் இழுத்து வரப்பட்டது.

காட்பாடி ரயில் நிலையத்தில் இரவு 11.20 மணியளவில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றபோது கவனித்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். அதற்கேற்ப ரயில் இன்ஜின் டிரைவரும் இறங்கி, இறந்தவர் முகுந்தராயபுரம் ரயில் நிலையம் அருகே ரயிலில் சிக்கியதாக தெரிவித்தார். உடனடியாக விரைந்து சென்ற ரயில்வே பணியாளர்களும், ரயில்வே போலீசாரும் இன்ஜின் முகப்பில் சிக்கிய சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயிலில் சிக்கி இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. சடலமாக கிடந்தவர் சிவப்பு கலரில் அரைக்கை டீ சர்ட்டும், கருப்பு கலர் டவுசரும் அணிந்திருந்தார். வலது கை மணிக்கட்டில் சிகப்பு கலர் கயிறு கட்டியிருந்தார். இதுதொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நேற்று முன்தினம் இரவு காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ரயிலில் 28 கி.மீ. தூரம் இழுத்து வரப்பட்ட வாலிபர் சடலம்: காட்பாடியில் பயணிகள் அலறல் appeared first on Dinakaran.

Related Stories: