வீட்டில் பதுக்கிய 2,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் பெண் அதிரடி கைது பள்ளிகொண்டா, குடியாத்தம் பகுதியில்

பள்ளிகொண்டா, ஜூன் 12: பள்ளிகொண்டா, குடியாத்தம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார். பள்ளிகொண்டா சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ரேகா மற்றும் காவலர்கள் ஆதிஷ், ராஜவேல் ஆகியோர் பள்ளிகொண்டா பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பள்ளிகொண்டா நடுத்தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சுமார் 30 மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசியை ஜோதி என்பவர் கடத்தி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 1,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து ஜோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே 4 முறை ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், ஜோதி குண்டாசில் கைதானது குறிப்பிடத்தக்கது. குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த சாமியார் மலை அடிவாரம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்வதாக வேலூர் மாவட்ட ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று இரவு சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவுக்கு கடத்த தயாராக இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அரிசியை கடத்துவதற்கு பயன்படுத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவற்றை குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய ஆட்டோ டிரைவர் மற்றும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

The post வீட்டில் பதுக்கிய 2,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் பெண் அதிரடி கைது பள்ளிகொண்டா, குடியாத்தம் பகுதியில் appeared first on Dinakaran.

Related Stories: