(வேலூர்) கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெட்டிக்கடையில் ₹5 ஆயிரம் பறிப்பு: பள்ளிகொண்டா அருகே ரவுடி கைது

பள்ளிகொண்டா, ஜூன் 18: பள்ளிகொண்டா அருகே பெட்டிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ₹5 ஆயிரம் பறித்து சென்ற ரவுடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கேம்ரான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சித்ரவேலு மகன் கருப்புசாமி(24). இவர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் பெட்டிக்கடை மற்றும் டீ கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில், வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த பன்னு(எ)சரத்குமார்(38) என்பவர், தனது பைக்கில் கருப்புசாமி பெட்டிக்கடைக்கு சென்று, கடையில் வேலை செய்யும் பழனி என்பவரிடம் ஒரு பாக்கெட் சிகரெட்டை கேட்டுள்ளார்.
அப்போது, பழனி ஒரு பாக்கெட் சிகரெட் வேண்டுமென்றால் ₹150 தர வேண்டும் என கூறினாராம். உடனே சரத்குமார், ‘நான் யாருன்னு தெரியுமா. என்ன பத்தி கேட்டு பார். இப்ப தான் ஜெயிலுக்கு போயிட்டு வந்தேன். நான் பெரிய ரவுடி. எனக்கு இப்போது ₹5 ஆயிரம் கொடுக்க வேண்டும்’ என மிரட்டல் விடுத்தாராம்.

ஆனால், பழனி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த சரத்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழனி கழுத்தில் வைத்து, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ₹5 ஆயிரத்தை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து, பெட்டிக்கடை உரிமையாளர் கருப்பசாமி நேற்று பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் தலைமறைவான சரத்குமாரை பல இடங்களில் தீவிரமாக தேடினர். தொடர்ந்து, அங்குள்ள ஆற்று பகுதியில் பதுங்கியிருந்த அவரை மடக்கி பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் இரவு பெட்டிக்கடையில் பழனியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் பன்னு(எ)சரத்குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து பைக் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post (வேலூர்) கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெட்டிக்கடையில் ₹5 ஆயிரம் பறிப்பு: பள்ளிகொண்டா அருகே ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: