பழைய நாணயங்களுக்கு பல லட்சம் தருவதாக விவசாயியிடம் ₹1.50 லட்சம் மோசடி ஒடுகத்தூர் அருகே பரபரப்பு பேஸ்புக்கில் நூதன விளம்பரத்தை பார்த்து ஏமாந்தார்

ஒடுகத்தூர், ஜூன் 15: ஒடுகத்தூர் அருகே பழைய நாணயங்களை கொடுத்தால் லட்சக்கணக்கில் திரும்ப கொடுப்பதாக கூறி விவசாயியிடம் ₹1.50 லட்சம் ேமாசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம்(44), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி(40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். விவசாயி பிரகாசம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஆர்வம் உள்ளவர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி பேஸ்புக்கில் பழைய 1, 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள், ரூபாய் நோட்டுகளுக்கு அதன் வருடங்களுக்கு ஏற்றார்போல் லட்சக்கணக்கில் பணம் தருவதாக வந்த விளம்பரத்தை பார்த்தார்.இதை நம்பிய பிரகாசம் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது, எதிர் திசையில் இருந்து பேசியவர் சேலத்தை சேர்ந்த அருண்குமார் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். தொடர்ந்து பிரகாசம், என்னிடம் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் உள்ளது என அதன் விவரங்களை கூறி, எவ்வளவு பணம் கிடைக்கும் என அருண்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், ‘நீங்கள் வைத்துள்ள நாணயம் மிகவும் பழமையானது. எனவே, அதற்கு ₹17 லட்சம் வரை கிடைக்கும்’ என ஆசையை தூண்டினார்.

தொடர்ந்து அருண்குமாரிடம் பணம் எப்போது தருவீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவர், ₹17 லட்சம் வேண்டுமென்றால் நான் சொல்வதை கேட்டால் மட்டும் தான் கிடைக்கும் என கூறியுள்ளார். தொடர்ந்து, கடந்த 8ம் தேதி மீண்டும் அருண்குமார், பிரகாசை தொடர்பு கொண்டு, உங்களுக்கு பெரிய தொகை கொடுப்பதில் வருமானவரித்துறை போன்ற சில சிக்கல்கள் உள்ளது. அதனை சரிசெய்ய முதலில் ₹1,800 செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். எனவே, அவர் தெரிவித்த வங்கிக்கணக்கிற்கு பிரகாசம் கூகுல் பே மூலம் பணம் அனுப்பி வைத்துள்ளார்.பின்னர், போனில் பேசிய அருண்குமார், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது ஆதார் கார்டு போட்டோ எடுத்து அனுப்பி வைத்து இவர் மூலம் தான் உனக்கு பணம் கிடைக்கும் எனவும் பிரகாசத்திடம் கூறியுள்ளார். தொடர்ந்து, பல்வேறு காரணங்களை கூறிய அருண்குமார், படிப்படியாக ₹1.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டாராம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் போன் செய்த அருண்குமார், உங்களது மாவட்ட எல்லைக்குள் பணத்துடன் வேனில் வந்துள்ளேன். ஆனால், வரும் வழியில் வேன் பழுதாகிவிட்டது. அதை சரி செய்ய ₹5 ஆயிரம் வேண்டும். அதனை அனுப்பி வைத்தால் மாலை 4 மணிக்குள் உங்களுக்கு ₹17 லட்சம் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். எனவே, பிரகாசம் அருண்குமார் கேட்ட பணத்தை கூகுள்பே, போன்பே மூலம் அனுப்பியுள்ளார். ஆனால், அன்று மாலை எதிர்பார்த்த பிரகாசத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து, நேற்று காலை அருண்குமாரை போனில் தொடர்பு கொண்டபோது, போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பிரகாசம், வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post பழைய நாணயங்களுக்கு பல லட்சம் தருவதாக விவசாயியிடம் ₹1.50 லட்சம் மோசடி ஒடுகத்தூர் அருகே பரபரப்பு பேஸ்புக்கில் நூதன விளம்பரத்தை பார்த்து ஏமாந்தார் appeared first on Dinakaran.

Related Stories: