கே.வி.குப்பம் அருகே அனுமதியின்றி நடந்த மாடு விடும் விழாவில் எஸ்ஐ உட்பட 15 பேர் காயம்

கே.வி.குப்பம், ஜூன் 16: கே.வி.குப்பம் அருகே அனுமதியின்றி நடந்த மாடுவிடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில், மாடுகள் முட்டியதில் எஸ்ஐ உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் ஊராட்சி இ.பி. காலனி பகுதியில் நேற்று 80ம் ஆண்டு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாடுவிடும் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கிராமத்தின் குலதெய்வமான முனீஸ்வரனுக்கு பொங்கல் வைத்து வழிபாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன. அனுமதியின்றி நடைபெற்ற விழா என்பதால் துறை சார்பில் எந்தவொரு அலுவலர்களும் பங்கேற்று விழாவினை கண்காணிக்கவில்லை. மேலும் அசம்பாவிதம் தடுக்க இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பிட்ட தூரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ₹70 ஆயிரமும் 2ம் பரிசாக ₹50 ஆயிரமும், மூன்றாவது பரிசு ₹40 ஆயிரமும் உள்ளிட்ட 70 பரிசுகளை விழா குழுவினர் காளை உரிமையாளர்களிடம் வழங்கினர்.

மேலும், தடுப்புகள்‌ உள்ளேயும், அதன் மேலும் நின்றுக்கொண்டிருந்த இளைஞர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், மாடுகள் முட்டியதில் பாதுகாப்பு பணிக்காக வந்த கே.வி.குப்பம் போலீஸ் எஸ்ஐ தவமணி உட்பட 15 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்களில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் எஸ்ஐ தவமணியை அருகில் இருந்த போலீசார் மீட்டு வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல் 2 காளைகள் தடுப்புகள் மீது மோதியதில் லேசான காயம் அடைந்தது.
மாடு விடும் விழாவில் 480 மாடுகளுக்கு அட்டை வழங்கப்பட்டது. ஆனால் மதியம் 2 மணிக்கு விழா நிறுத்தப்பட்டதால், சுமார் 25 மாடுகள் பங்கேற்கவில்லை. இதையடுத்து நுழைவு கட்டணம் செலுத்தியதை திருப்பி கேட்டு மாடு உரிமையாளர்கள் விழா குழுவினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசார் சமரசம் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

The post கே.வி.குப்பம் அருகே அனுமதியின்றி நடந்த மாடு விடும் விழாவில் எஸ்ஐ உட்பட 15 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: