மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு..!!

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியில் ஆம்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நேற்றைய தினம் இந்த தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது. தொழிற்சாலையில் 3 மடங்கு வெடி சத்தம் கேட்டதாகவும் அருகில் வசித்தவர்கள் தெரிவித்தனர். இந்த அதிர்வு காரணமாக 3, 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது போல் உணர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

விபத்து நிகழ்ந்த இடத்தில் வெளியான கரும்புகையால் சாம்பல் துகள்கள் மழை தூரல்போல் விழுந்துள்ளது. தொழிற்சாலையின் அருகில் இருந்த கார் ஷோ ரூம் மற்றும் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் எரிந்து சேதமடைந்தது. அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்த கண்ணாடிகள், கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இந்த விபத்தில் நேற்றைய தினம் 7 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இன்று காலை 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ முழுவதும் அப்பகுதியில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தற்போது அங்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் அவ்வப்போது இன்னும் உடல்கள் இருக்கிறதா என்பது குறித்து தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் சோதனை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் காயமடைந்த ஊழியர்களுக்கு அந்த நிர்வாகம் தரப்பில் இழப்பீடு, சிகிச்சைக்கான இழப்பீடும் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

The post மகாராஷ்டிரா மாநிலத்தில் தொழிற்சாலை பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: