தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது. கர்நாடக காங்கிரசுக்கு எதிராக போராடவும் தயார் என்று செல்வப்பெருந்தகை கூறினார். தமிழக காங்கிரஸ் சார்பில் காமராஜர் அரங்கத்தின் முகப்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது. இதுகுறித்து, உள்துறை அமைச்கம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பாஜ தலைவர்கள் யாரும் ஏன் வாய்திறக்கவில்லை.

காவிரி விவகாரத்தில், அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட வைக்க முடியாது. ஒழுக்காற்று குழு பாரபட்சமாக செயல்படுகிறது. ராணுவத்தின் உதவியுடன் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம். பாஜ நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைய போவதால், நோட்டாவின் கீழ் வாக்கு பெறுவதற்கு அண்ணாமலை தயார் ஆகிறார்.

கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தை தமிழக அரசு முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், பொருளாளர் ரூபி மனோகரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், எம்.ஏ.முத்தழகன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, நடிகர் மன்சூர் அலிகான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: