தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா விஜய் முன்னிலையில் தமிழக அரசுக்கு பாராட்டு: நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதாரம்; பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பானது தமிழ்நாடு என ஆற்காடு நவாப் புகழாரம்

சென்னை: தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் முன்னிலையில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விழாவில் பேசிய ஆற்காடு நவாப், ‘நாட்டிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என புகழாரம் சூட்டினார். இதை கேட்டதும் விஜய் தலையை குனிந்து கொண்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்த ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ பாலிடிக்ஸை செய்து வந்தார். எக்ஸ் தளத்தில் பதிவை மட்டும் போட்டுவிட்டு, மறைந்த தலைவர்களுக்கு வீட்டிலேயே படத்தை வைத்து மரியாதை செலுத்துவிட்டு, கொள்கை தலைவர்கள் என கூறி மற்ற கட்சிகள் முன்னெடுக்கும் தலைவர்களை உரிமை கொண்டாடி பேசி வந்தார்.

இதனால், நடிகர் விஜய் களத்தில் வந்து அரசியல் செய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகள் குறித்து பேச வேண்டும். பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திருச்சியில் இருந்து விஜய் தொடங்கினார். திருச்சியில், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் பிரசாரம் செய்த விஜய், தமிழக அரசு மீதும், திமுக மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் அவர் பேசிய புள்ளி விவரங்கள் அத்தனையும் பொய் என்று ஆதாரத்துடன் அமைச்சர்கள், திமுகவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால் ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பவர்களை விஜய் மாற்ற வேண்டும் என தவெகவினரே கமென்ட் அடித்து வந்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் 27ம் தேதி கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அவர்கள் முகத்தை கூட பார்க்காமல் தனி விமானத்தில் சென்னைக்கு பறந்து சென்று ஒரு மாதம் வீட்டிற்குள்ளேயே விஜய் முடங்கினார். பின்னர், அரசியலில் வரலாற்றிலேயே பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு வரவழைத்து ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்து ஆறுதல் சொன்னார் விஜய். ‘‘மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடம் கற்றுக்கொள், மக்களுக்கு சேவையாற்று’’ என்று அண்ணா சொன்ன வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தும் விஜய், தனி விமானத்தில் பறப்பார், தனி சொகுசு காரில் போவார், மக்களை பல மணி நேரம் காக்க வைப்பார்.

ஆனால், களத்தில் இறங்கி மக்களுடன் சென்று அரசியல் செய்ய மாட்டார். சேவை செய்ய மாட்டார். அவர் சொன்ன கொள்கைகளையும், கொள்கை தலைவர்களையும் விஜய் இதுவரை பின்பற்றியதே இல்லை. கிட்டத்திட்ட 2 மாதங்களுக்கு பின் டிசம்பர் 11ம் தேதி புதுச்சேரியில் பிரசாரம் செய்த விஜய், ‘ரேஷன் கடையே இல்லாத மாநிலம் புதுச்சேரி’ என்றார். இதற்கு பாஜ அமைச்சர் நமச்சிவாயம், ‘‘விஜய்க்கு புதுச்சேரி நிர்வாகம் பற்றி தெரியாது. ரேஷன் கடைகள் புதுச்சேரியில் இயங்கி கொண்டிருப்பதை கூட தெரியாமல் எழுதி கொடுத்ததை படித்துவிட்டு செல்கிறார்’ என பதிலடி கொடுத்தார்.

இதன்பின், கடந்த 18ம் தேதி ஈரோட்டில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசுகையில், ‘‘தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை. இந்தியாவிலேயே கல்வி இடைநிற்றல் அதிகமாக உள்ளது’’ என பேப்பரை பார்த்து ஒப்புவித்துவிட்டு சென்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘‘செங்கோட்டையன் கல்வி அமைச்சராக இருந்தபோதுதான் இடைநிற்றல் 16 சதவீதம் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தபின் 7.74 சதவீதமாக குறைந்து உள்ளது. இந்தியாவிலேயே குறைந்த இடைநிற்றல் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பழைய செய்தியை பார்த்துவிட்டு படிக்கிறார். விஜய் அப்டேட்டுடன் பேச வேண்டும்’’ என ஆதாரத்துடன் பதிலடி கொடுத்தார்.

இதேபோல், பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னணி மாநிலம் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் தேசிய மகளிர் பாதுகாப்பு அறிக்கை போன்ற ஒன்றிய அரசின் துறைகள் வெளியிட்டுள்ள தரவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தேசிய அளவில் குறைந்த விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. தமிழகம் பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவின் பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்று என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழகம் அமைதி பூங்கா என ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களே ஒத்துக்கொள்ளும் நிலையில், திமுகவை குறை சொல்ல வேண்டுமென்றே விஜய் மனம் போன போக்கில் அடித்துவிட்டு சென்றார். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் தவெக தலைவர் விஜய், பாதிரியார்கள், ஆற்காடு நவாப் முகமது அலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், ஆற்காடு நவாப் முகமது அலி பேசியதாவது: நான் முஸ்லிம் மதத்தை பின்பற்றுகிறேன். ஆனால், எனது மகன் பெயர் ஜீசஸ். மூத்த மகன் பெயர் ஆப்ரகாம். நாங்களும் மேன்மை தாங்கிய இயேசு கிறிஸ்து, அன்னை மேரி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். அப்படி இல்லையெனில் நாங்கள் முஸ்லிமே அல்ல. நான் இயேசு கிறிஸ்துவை நம்பவில்லை எனில் நான் முஸ்லிமே கிடையாது. நான் இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அது தான் என்னை உண்மையான முஸ்லிம் ஆக்குகிறது.

எனது குடும்பம் ஒரு காலத்தில் ஆற்காடு நவாப் என்ற பெயரில் மேலோங்கி வாழ்ந்து வந்தனர். அதற்கு உதாரணமாக இந்து கோயில்களுக்கு சுமார் 340 இடங்களையும், தேவாலயங்களுக்கு 100க்கும் மேற்பட்ட இடங்களையும் வழங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் பங்கேற்பது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன், இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என அனைத்து மதத்தினருக்கும் மனிதநேயத்துடன் மரியாதை அளிக்கும் மாநிலமாகவும் விளங்கி வருகிறது. ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்று பார்ப்பதில்லை. அவர்கள் மக்களை மதிக்கிறார்கள். இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் மாநிலம் தமிழ்நாடு. இவ்வாறு அவர் பேசினார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று பேசிய விஜய்க்கு, அவரை மேடையில் வைத்து கொண்டே, ‘பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு’ என்று ஆற்காடு நவாப் பதிலடி கொடுத்தை கேட்டு விஜய் தலையை கீழே குனிந்து கொண்டார். அவரது முகம் இறுக்கமானது. தமிழக அரசுக்கு புகழாரம் சூட்டிய ஆற்காடு நவாப்பின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி டிரெண்டாகி வருகிறது. இதை ஏராளமானோர் பகிர்ந்து விஜய்யை விமர்சித்து வருகின்றனர்.

* தமிழ்நாடு மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
* அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது.
* தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்று பார்ப்பதில்லை.
* பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது.
* இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

Related Stories: