சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து வேலைவாய்ப்பு, மகளிர் உரிமை, விவசாயங்களை பாதுகாப்பது, மாநில உரிமை போன்றவற்றை உள்ளடக்கி திமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என கனிமொழி எம்.பி. கூறினார். 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது. அதில், டி.கே.எஸ்.இளங்கோவன், வர்த்தகரணி துணைத் தலைவர் அமைச்சர் கோவி.செழியன், சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மருத்துவ அணி செயலாளர் எழிலன் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, மகளிர் தொண்டரணி துணை செயலாளர் தமிழரசி ரவிக்குமார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம், ‘கனவு தமிழ்நாடு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் பங்கேற்றனர். இந்த குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுநலச்சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் அறிக்கையை தயாரிப்பார்கள். இந்த குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் கனிமொழி கூறுகையில்,‘ இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எந்தெந்த மாவட்டத்திற்கு செல்ல இருக்கிறோம் யாரையெல்லாம் சந்திக்க உள்ளோம் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது. தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். திமுக தேர்தல் அறிக்கை முதலமைச்சர் உடைய ஆலோசனைகளை பெற்று தமிழகத்தின் வளர்ச்சியை கொண்டு உருவாக்கப்படும். வேலை வாய்ப்புகள், மகளிர் உரிமை, விவசாயிகளை பாதுகாப்பது, ஒன்றிய அரசாங்கம் வேலை வாய்ப்பை பறிப்பதை ஒரு வேலையாக பார்த்துக் கொண்டிருக்க கூடிய இந்த நேரத்தில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, மாநில உரிமைக்கு போராடுவது இதையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்,’என்றார்.
