நெல்லை: ‘தமிழக வெற்றிக் கழகமா? அப்படி முழுவதுமாக சொன்னால் எனக்கு அது எந்த கட்சி என தெரியவில்லை. விஜய்ைய அரசியல்வாதியாகவே நான் கருதவில்லை’ என்று நடிகர் சரத்குமார் தெரிவித்தார். நெல்லையில் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் நேற்று அளித்த பேட்டி: தமிழக வெற்றிக் கழகமா? அப்படி முழுவதுமாக சொன்னால் எனக்கு அது எந்த கட்சி என தெரியவில்லை. விஜய்க்கு யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று தெரியவில்லை. ஒன்றிய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தால் தான் செய்திகள் வரும் என அவரிடம் யாரோ சொல்லி உள்ளனர். விஜய்யை பிரமாண்டமாக காட்டி அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுகதான் பெரிய கட்சி. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை.
ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார். பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் `இன்டிகோ 2 கே 25’ கலை விழாவை நடிகர் சரத்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும். விஜய்யை அரசியல்வாதியாக நாங்கள் ஏற்கவில்லை. அவரது கொள்கை என்ன, கோட்பாடு என்ன என்று அவரிடம் பதில் இருக்காது. ஊடகங்கள் தான் அவரிடம் கேட்க வேண்டும். அவர் சமீபத்தில் பேசிய போது வீடுகள் தருவதாக கூறியிருக்கிறார். அதை கொடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. தமிழகத்திற்கு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதை எப்படி அடைப்பார்’ என்றார்.
