மதுரை: எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியுடன் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள ஏஐ செல்பி வீடியோவை கண்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது எக்ஸ் தளத்தில், ‘நண்பர்களே… இன்றைய அறிவியல் வளர்ச்சி.. என் இதய தெய்வங்களோடு நான் செல்பி எடுப்பது போல..’ எனத் தலைப்பிட்டு ஒரு ஏஐ வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் மதுரை ரயில் நிலைய பெயர் பலகையுடன் செல்லூர் ராஜூ செல்பி எடுப்பது போன்று உள்ளது.
எம்ஜிஆருடன் செல்பி எடுக்கும்போது, ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்..’ பாடலும், ஜெயலலிதாவுடன், ‘மிகவும் பிடித்த அம்மா, புரட்சித்தலைவி அம்மா..’ பாடலும், எடப்பாடி பழனிசாமியுடன், ‘எடப்பாடியாரே எடப்பாடியாரே… மக்கள் நெஞ்சில் வாழும்..’ பாடலும் ஒலிக்கிறது. தொடர்ந்து மதுரை பெயர் பலகையுடன் செல்பி எடுக்கும்போது, ‘மாமதுரை சீமையின்னா மரிக்கொழுந்து வாசம்…’ பாடலும் ஒலிக்கிறது. இந்த எக்ஸ் தளப்பதிவை பார்வையிட்டு பலரும் கமென்ட்களை போட்டு பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.
ஒருவர், ‘நீங்கள்லாம் மறந்து போன உங்க கட்சி பேர்ல, அண்ணான்னு ஒருத்தர் இருக்காரே, அவரெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா சாரே…’ என்றும், ‘அவ்வளவு தூரம் போயிட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா?’ எனத்துவங்கி, ‘எடப்பாடி பழனிசாமியை நேர்ல போயே எடுத்திருக்கலாமே?’, ‘முதல் முறையாக ஜெயலலிதா முன்னாள் நிமிர்ந்து நின்ற சயின்டிஸ்ட்’ மற்றும் செல்லூர் ராஜூ வைகையாற்றில் தெர்மோகோல் போடும் படங்களையும் பதிவிட்டு பலரும் தொடர் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
