சென்னை: தமிழக வெற்றி கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் `சமத்துவ கிறிதுஸ்மஸ் விழா’ நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ்னு இந்த மாதிரி எல்லா பண்டிகைகளும் எல்லோரும் சந்தோசமா ஷேர் பண்ணிக்கிற ஊரு தானே நம்ம ஊரு. நம்பிக்கையோட வலிமையை பற்றி சொல்றதுக்கு பைபிளில் நிறைய கதைகள் இருக்கு. ஒன்றை பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு இளைஞனுக்கு எதிரா தனது சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு, அவனை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு, அதிலிருந்து அவன் மீண்டு வந்து நாட்டுக்கே அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமில்ல, நாட்டையே எப்படி காப்பாற்றுனாருன்னு கதைகள் பைபிளில் இருக்கு.
அந்த குறிப்பிட்ட கதை யாரை பற்றிய கதைன்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். அது உங்களுக்கு நல்லா தெரியும். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் எதை உணர்த்துகிறது என்றால், கடவுள் அருளும், மக்களை மானசீகமாக நேசிக்கிற அந்த அன்பும், அதீத வலிமையும், அதுக்கான உழைப்பும் இருந்தாலே போதும், எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம். இந்த விழாவில் நான் உறுதி ஒன்றைக் கொடுக்கிறேன், நாமும், தவெகவும் சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100 சதவீதம் உறுதியாக இருப்போம். அதில் எந்தவிதமான காம்பிரமைஸும் இருக்காது. கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூகநீதி என்று பேரு வைத்ததே இந்த உறுதியால்தான்.
