மகாத்மா காந்தி பெயர் நீக்கத்தை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைக்கவும், வறுமையை ஒழிக்கவும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்குகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அந்த திட்டம் வந்தது முதற்கொண்டு அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி கடுமையாக விமர்சித்து வந்தார். கடந்த 11 ஆண்டுகளாக அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்து அதை முடக்குவதற்கு பல உத்திகள் கையாளப்பட்டன.

இறுதியாக மகாத்மா காந்தி பெயரை நீக்கி விட்டு வாயில் நுழையாத பெயரை வைத்து புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் பாஜ நிறைவேற்றியிருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த செயலை கண்டித்து வரும் டிசம்பர் 24ம்தேதி தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு இருக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நிச்சயம் அமையப் போகிறது. இதன்மூலமாக ஒன்றிய பாஜ அரசுக்கு எச்சரிக்கையாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய தமிழ்நாட்டு மக்கள் பேராதரவு வழங்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: