ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத வயதிலும் வாக்குரிமையை விட்டுக் கொடுக்காத முதியவர்கள்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத வயதிலும் முதியவர்களை தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 791 ஆண்களும், ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 793 பெண்களும், இதர பிரிவினர் 17 என மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 601 வாக்காளர்கள் உள்ளனர். ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 247 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு பணி காரணங்களுக்காக வெளியில் சென்ற அனைத்து தரப்பினரும் தங்களின் சொந்த ஊருக்கு வந்து நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் அவர்கள் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று தங்களின் ஜனநாயக கடமையான வாக்குப்பதிவை பதிவு செய்தனர்.

இதில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக போலீஸ் பாதுகாப்பு வசதியும், குடிநீர், கழிவறை வசதி, முதியவர்களை அழைத்து செல்வதற்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தில் உள்ள முதியவர்களையும் வாக்களிக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காதவாறு கால்நடையாகவும், பைக் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு அழைத்து வந்து அவர்களது ஓட்டை வாக்களித்துச் சென்றனர். அதே போல் ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் தம்பதி வாக்களிக்க வந்தனர்.

இதில் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி, அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அசோக் நகர், ஆசிரியர் நகர், தென்றல் நகர், லட்சுமி நகர், என் ஜி ஓ நகர், அம்பேத்கர் நகர், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 9 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல அறிந்து கொள்வதற்காக வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களின் ஒப்புகழ்ச்சீட்டை ஏற்று அவர்கள் வாக்களிக்க உள்ள பூத் மையத்தை தெளிவுபடுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனால் வாக்காளர்கள் எந்த சிரமமும் இன்றி எளிமையாக வாக்களித்து சென்றனர். ஒரு சில வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் மதியம் வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர். அப்போது வாக்குச்சாவடி மையம் பகுதியில் தேவையில்லாமல் சுற்றி தெரியும் நபர்களை போலீசார் கண்காணித்து விரட்டி அடித்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட எஸ்பி ஆய்வு

ஜோலார்பேட்டை பாச்சல் ஊராட்சிக்குட்பட்ட அசோக் நகர் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தில் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறதா என்பதை மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்காளர்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார். மேலும் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

முதல் ஓட்டை பதிவு செய்த இளைஞர்கள்

ஜோலார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இளம் தலைமுறையினரான முதல் ஓட்டு பதிவு செய்ய உள்ள இளைஞர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக பூத் ஸ்லிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தங்களின் முதல் ஓட்டை ஆர்வத்துடன் செலுத்தி மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது வாக்கு சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த இளைஞர்கள் கூறுகையில், ‘எங்கள் குடும்பத்தில் பலர் பலமுறை வாக்களித்துள்ளனர். முதன்முறையாக வாக்களிப்பது ஒரு பதற்றமாக இருந்தது. தற்போது இந்திய ஜனநாயக கடமையான எனது வாக்குரிமையை நமக்கு பிடித்த வேட்பாளர் நபரை தேர்வு செய்து வாக்களித்ததில் பெருமை கொள்கிறேன்’ என்றனர்.

The post ஜோலார்பேட்டை தொகுதியில் தள்ளாத வயதிலும் வாக்குரிமையை விட்டுக் கொடுக்காத முதியவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: