கோட்டையாக கருதப்படும் குஜராத்திலேயே பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு… பிரச்சார கூட்டங்களை ரத்து செய்யும் வேட்பாளர்கள்!!

அகமதாபாத் : பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பாஜக வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை ரத்து செய்து வருகின்றனர். ஒன்றிய அமைச்சரும் குஜராத்தின் ராஜ்கோட் தொகுதி வேட்பாளருமான புருஷோத்தம் ரூபாலா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் ராஜ்புத் சமூகத்தினர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதாவது ஆங்கிலேயர்களுடன் அவர்கள் இணைந்து செயல்பட்டதாகவும் தங்களது வீட்டு பெண்களை ஆங்கிலேயர் ஆட்சியர்களுக்கு மணமுடித்து கொடுத்ததாகவும் பேசி இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் ராஜ்புத் சமூகத்தினர், ரூபாலாவை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் கட்சி தலைமை அதனை ஏற்க மறுத்து வருவதால் ரூபாலாவுக்கு எதிராக தொடங்கிய ராஜ்புத் சமூகத்தினர் போராட்டம் தற்போது குஜராத் மாநிலம் முழுவதும் பரவி உள்ளது.

இந்த நிலையில், ஜாம்நகரில் அந்த தொகுதி பாஜக வேட்பாளர் பூனம் மடம் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு திரண்ட ராஜ்புத் சமூகத்தினர் வேட்பாளர் ரூபாலாவை மாற்றக்கோரி முழக்கமிட்டனர். பூனம் மடம் வேண்டி கேட்டுக் கொண்ட பிறகும் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு காரணமாக ஜாம்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் பூனம் மடம் தமது பிரச்சார கூட்டத்தை ரத்து செய்தார்.

அவரது வீட்டில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார கூட்டத்திலேயே அவரால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதற்கு முன் பதான் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பரத்சின் தாபிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றார். அதே போல்,பருச், பாவநகர், சிகோர் ஆகிய இடங்களிலும் பொது மக்கள் எதிர்ப்பால் பாஜக வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை ரத்து செய்துள்ளனர். பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்திலேயே அக்கட்சி வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜகவை கலக்கம் அடைய செய்துள்ளது.

The post கோட்டையாக கருதப்படும் குஜராத்திலேயே பாஜகவிற்கு கடும் எதிர்ப்பு… பிரச்சார கூட்டங்களை ரத்து செய்யும் வேட்பாளர்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: