தேர்தலில் வாக்களித்தது புதிய அனுபவம்-முதல் தலைமுறை வாக்காளர்கள் உற்சாகம்

மஞ்சூர் : தேர்தலில் வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது என முதல் தலைமுறை வாக்காளர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தார்கள். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள்.

இதேபோல் கரியமலை, முள்ளிமலை, கீழ்குந்தா, பிக்கட்டி, எடக்காடு உள்பட சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். ஊட்டி எம்.எல்.ஏ கணேசன் தனது சொந்த ஊரான மஞ்சகம்பை பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன் மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவர் மஞ்சைமோகன் மஞ்சக்கொம்பையில் உள்ள தோட்டக் கலைத்துறை கிடங்கு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

கீழ்குந்தா வாக்குச்சாவடியில் படுகரின பெண்களும், பிக்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மலைவாழ் பழங்குடிகளான கோத்தரின மக்களும் ஆர்வமுடன் வாக்களித்தார்கள். குறிப்பாக, 18 வயது பூர்த்தி அடைந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது முதல் வாக்குகளை பதிவு செய்தார்கள்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, தேர்தலில் முதல் முறையாக ஓட்டு போட்டது தங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. ஓட்டு போட்டதன் மூலம் ஜனநாயக கடமை ஆற்றியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்கள்.

பந்தலூர்: தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டத்தில் நேற்று தேர்தல் நடந்தது. பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் சிறுபான்மையினர் பெண்கள் மற்றும் பழங்குடியினர் பெண்கள் முதன்முதலாக வாக்களிக்கும் இளைஞர்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் எம்எல்ஏக்கள் திராவிடமணி மற்றும் கருப்புசாமி தங்களது குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சிறுபான்மையினர் பெண்கள் மற்றும் பழங்குடியினர் பெண்களும் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்தனர்.

வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒரு சிலர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தனர். கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அய்யன்கொல்லி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், வாக்காளர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 129வது வாக்குச்சாவடி மையத்தில் மதியம் 2 மணி முதல் வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் சுமார் 30 நிமிடத்திற்கு மேல் வாக்குபதிவு தாமதமானது. அதன்பின், வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மதியம் 3 மணி வரை பந்தலூரில் 50 சதவீதம் வாக்குப்பதிவு இருந்தது. மதியத்திற்கு பிறகு வாக்குப்பதிவு மந்தமானது. பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள மாதிரி வாக்குசாவடி மையத்தில் வாக்காளர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

The post தேர்தலில் வாக்களித்தது புதிய அனுபவம்-முதல் தலைமுறை வாக்காளர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: