நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்

ஊட்டி : ஊட்டி அருகே உள்ள கோக்கால், கார்டன்மந்து, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் காலை முதலே வாக்குசாவடிக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. நீலகிரி தனி தொகுதிக்குட்பட்ட ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 689 வாக்குசாவடிகள் உள்ளன. இதில், ஊட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில் உள்ள மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால், கிராம பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.

ஒரு சில கிராமங்களில் வாக்களித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் காலை முதலே வந்து குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர். கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்புறங்களிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். குறிப்பாக கோக்கால், காா்டன்மந்து, கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தோடர், கோத்தர் உள்ளிட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து வந்து வாக்களித்து சென்றனர்.

கடந்த காலங்களில் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கடந்த தேர்தல்களில் வாக்களிப்பதற்கு பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தற்ேபாது வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் ஆணையம், பொதுமக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. இதன் காரணமாக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அதிகாரிகள் தொிவித்தனர். வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான பந்தல், குடிநீர், சாய்வு தளம், சக்கர நாற்காலி போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீலகிரி தொகுதியில் மொத்தமுள்ள 1619 வாக்குச்சாவடிகளில் பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 176 வாக்குசாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இணைய வழி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இதேபோல் மகளிர் மற்றும் மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் மிக ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். ஒரு சில பகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட மூதாட்டிகள் உறவினர்கள் துணையுடன் வந்து வாக்கு செலுத்தினர்.

ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திருநங்கைகள் கூட்டமாக வந்து வாக்களித்து அனைவரும் ஓட்டு பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை பெகும்பஹள்ளா. இப்பகுதியில் நீர் மின் நிலையம் உள்ளது. இதை முன்னிட்டு இப்பகுதியில் மின்வாரிய அலுவலர், ஊழியர் குடியிருப்புகளுடன் பிற மக்களும் வசித்து வருகிறார்கள்.

வாக்காளர் பட்டியல்படி இப்பகுதியில் 76 வாக்காளர்களே இடம் பெற்றுள்ளதால் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் மிக குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ள பகுதியாக உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

இதில், மொத்தம் உள்ள 76 வாக்காளர்களில் 65 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல் எல்லையோர கிராமமான கோரகுந்தாவில் மொத்தம் 113 வாக்காளர்கள் உள்ள நிலையில் நேற்று நடைபெற்ற தேர்தலில் 76 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் கெத்தை வாக்குச்சாவடியில் 85சதவீத ஓட்டும், கோரகுந்தா வாக்குச்சாவடியில் 75சதவீத வாக்கும் பதிவானது.

The post நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: