குடிநீர் பிரச்னை காரணமாக தேர்தலை புறக்கணித்த நெல்லை திருத்து கிராம மக்கள்

*அதிகாரிகள் சமரசம் தோல்வி

*997 ஓட்டுக்களில் 17 ஓட்டுக்கள் மட்டுமே பதிவு

மானூர் : குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி நெல்லை திருத்து கிராமத்தில் பொதுமக்கள் மக்களவைத் தேர்தலை புறக்கணித்து கோயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்த வாக்குச்சாவடியில் 997 ஓட்டுக்களில் 17 ஓட்டுக்கள் மட்டுமே பதிவானது.

நெல்லை மாவட்டம், மானூர் தாலுகா பல்லிக்கோட்டை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த மூன்று கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பிரான்சேரி பகுதியில் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் கிணறு வெட்டப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் நெல்லை திருத்து கிராமத்துக்கு தண்ணீர் முறையாக வழங்கப்படுவதில்லை. சாலைகள் முறையாக அமைக்கப்படவில்லை. அங்கன்வாடி மையம் இல்லை. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்த வேண்டியும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் அப்பகுதியில் உள்ள கோயிலில் தர்ணா போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாததை கண்டித்து நெல்லை திருத்து பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்தனர். நெல்லை திருத்து பகுதியில் உள்ள பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக அலவந்தான்குளம் செயின்ட் அந்தோணியாளர் மேல்நிலைப்பள்ளி மைய கட்டிடத்தில் வாக்குச்சாவடி எண்.93 அமைக்கப்பட்டது.

இப்பகுதியில் நெல்லை திருத்து அம்மன் கோவில் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் 994 வாக்குகள் உள்ளன. காலை முதலே பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்ததால் இந்த வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. இதையடுத்து பிற்பகலில் நெல்லை ஆர்டிஓ கண்ணா கருப்பையா, மானூர் தாசில்தார் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு பொதுமக்கள் உடன்படாததால் தோல்வியில் முடிந்தது.

இதனால் தேர்தலை அந்த ஊர் மக்கள் முழுவதுமாக புறக்கணித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 17 ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி இருந்தன. இதில் அரசு ஊழியர்கள் பணிச்சான்று மூலம் 10 வாக்குகள் அளித்திருந்தனர். ெபாதுமக்கள் 7 பேர் மட்டுமே வாக்களித்தனர்.அடிப்படை வசதிகளை முறையாக செய்துதர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் பொதுமக்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post குடிநீர் பிரச்னை காரணமாக தேர்தலை புறக்கணித்த நெல்லை திருத்து கிராம மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: