சிறையில் இருந்து ஆட்சி நடத்த கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே ஆட்சி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி புதிய மதுபானக் கொள்கை விவகாரத்த்தில் கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மே.25ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வராக இருந்த சிசோடியா ஆகியோர் சிறையில் இருப்பதால் ஆம் ஆத்மி பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழலில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்த் பிரசாத் மூலம் ஒரு புதிய பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மனுவில் கூறியுள்ளதில்,‘‘அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வருகிறார். இருப்பினும் அவர் அங்கு இருந்தவாரே மாநில அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்கானித்து அதிகாரிகளுக்கு போதிய உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறார். இதனால் மக்கள் பணியில் எந்தவித பாதிப்பும் இல்லை.

குறிப்பாக இந்த மனுவின் மூலம் நீதிமன்றத்திற்கு ஒரு முக்கிய தகவலை தெரிவிக்க விரும்புகிறேன். அதில், சிறையில் இருந்தவாறு நாட்டின் பிரதமரோ அல்லது முதல்வரோ அரசை ஆட்சி அதிகாரம் செய்து வழி நடத்தக் கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளின் மூலம் எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை. எனவே அதனை அடிப்படையாக கொண்டு, கெஜ்ரிவால் முதல்வராக தொடர்வது ஒருபுறம் இருந்தாலும், அவர் திகார் சிறையில் இருந்து கொண்டே ஆட்சி நடத்தவும், அதேபோன்று அமைச்சரவைக் கூட்டத்தை காணொளி மூலமாக நடத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான அனைத்து விதமான உரிய வசதிகளையும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிறையில் ஏற்படுத்தி தர நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இந்த மனு அடுத்த ஓரிரு நாளில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சிறையில் இருந்து ஆட்சி நடத்த கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: