மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்தார் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா !!

புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார். அன்னிய செலாவணி மீறல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹூவா மொய்த்ரா மற்றும் தொழில் அதிபர் தர்ஷன் ஹிராநந்தானி இன்று ஆஜராகும்படி அமலாக்கத்துறை உத்தரவிட்டு இருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பியாக இருந்த மஹூவா மொய்த்ரா(49) நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க லஞ்சம் வாங்கினார் என பாஜ எம்பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார்.

துபாயை சேர்ந்த தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி என்பவரிடம் இருந்து பணம் மற்றும் ஏராளமான பரிசுபொருட்களை வாங்கினார் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மொய்த்ராவின் பதவியை பறித்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.இதனிடையே நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மொய்த்ரா மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், மொய்த்ரா மற்றும் தர்ஷன் மீது அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி இருவருக்கும் அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், மஹுவா மொய்த்ரா தான் தவறாக ஏதும் செய்யவில்லை என தொடர்ந்து கூறி வரும் நிலையில், சம்மனை நிராகரித்துள்ளார். இன்று மதியம் கிருஷ்ணநகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மார்ச் மற்றும் பிப்ரவரி என இரண்டு முறை அமலாக்கத்துறையின் சம்மனை மஹுவா மொய்த்ரா நிராகரித்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

The post மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்தார் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா !! appeared first on Dinakaran.

Related Stories: