சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு போக்குவரத்தால் இந்தியா – ரஷ்யா இடையே பயண தூரம் 40% குறையும்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தகவல்

சென்னை: சென்னை விளாடிவோஸ்டாக் இடையிலான கிழக்குக் கடல் சார் வழித்தடத்தை செயல்படுத்துவது தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையிலான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதனை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார். இதில் ரஷ்யா சார்பில் அந்நாட்டின் தூரக் கிழக்கு மற்றும் ஆர்க்டிக் பகுதி மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் அனடோலி யூரியேவிச் போப்ரகோவ் பங்கேற்றார்.

பின்னர் ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேசுகையில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்களுக்கும், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் இணைப்பு இருதரப்பு வர்த்தகத்தில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பொருளாதார மேம்பாட்டையும் ஊக்குவிக்கும். இந்த வழித்தடத்தின் மூலம், இந்தியாவுக்கும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிக்கும் இடையே சரக்குப் போக்குவரத்துக்கான நேரம் கணிசமாகக் குறையும். அதாவது, தூரத்தில் 40 சதவீதம் குறைவதோடு 16 நாட்கள் குறையும். தற்போது, மும்பை துறைமுகத்திற்கும் சூயஸ் கால்வாய் வழியாக மேற்குக் கடல் பாதை மூலம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திற்கு சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. இதன் தூரம் 16,066 கிலோ மீட்டராகும். சென்னைத் துறைமுகத்திலிருந்து கிழக்குக் கடல் சார் வழித்தடம் மூலம் விளாடிவோஸ்டோக் துறைமுகத்திற்கான தூரம் 10,458 கிலோ மீட்டர் மட்டுமே என்று தெரிவித்தார்.

The post சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு போக்குவரத்தால் இந்தியா – ரஷ்யா இடையே பயண தூரம் 40% குறையும்: ஒன்றிய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: