நாளை இரவு ஆளுநர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் மறுநாள் (27ம் தேதி) காலை 9 மணி முதல் 9.30 மணிவரை ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சந்திக்கிறார். இதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு செல்கிறார். அங்கு காலை 10.15 மணி முதல் 11.15 மணிவரை நடைபெறும் 8வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் காரில் புறப்பட்டு, மதியம் 11.55 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்துக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வந்து சேருகிறார். அங்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பு விழா நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, சென்னையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு, சென்னையில் இருந்து மதியம் 12.05 மணியளவில் இந்திய விமானப்படையின் தனி விமானம் மூலமாக புதுடெல்லிக்குப் புறப்பட்டு செல்கிறார்.
நாளை (26ம் தேதி) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக சென்னை வருவதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லியிலிருந்து குடியரசு தலைவரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் முன்னதாக சென்னை பழைய விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் குடியரசு தலைவரை வரவேற்க வருபவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவது உள்பட பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டன. மேலும், சென்னை பழைய விமான நிலையத்தில் குடியரசு தலைவரின் தனி விமானம் வந்து நிற்குமிடம், அவருக்கு வரவேற்பு அளிக்கும் பகுதி, பின்னர் அவர் கார் மூலம் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு செல்லும் சாலை ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டன.
இந்நிலையில், நாளை (26ம் தேதி) குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு, சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக கிண்டி ஆளுநர் மாளிகை வரையும், பின்னர் ஆளுநர் மாளிகையில் இருந்து, ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரையிலும் இன்று பாதுகாப்பு அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. மேலும், சென்னை விமானநிலைய வளாகம் முழுவதிலும் இன்று காலை முதல் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் நாளை மறுநாள் (28ம் தேதி) மாலை வரை நீடிக்கும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post புதுடெல்லியில் இருந்து நாளை குடியரசு தலைவர் 2 நாள் பயணமாக சென்னை வருகை: விமானநிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு appeared first on Dinakaran.
