ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளரின் உறவினர் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு: கோபி, ஈரோட்டில் பரபரப்பு

கோபி: ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநருமானன ராமேஸ்வர முருகனின் உறவினர் வீடுகளில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன். தமிழக பள்ளி கல்வித்துறை முன்னாள் இயக்குனராக இவர், ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயிலை சேர்ந்தவர். இவர், தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் சின்னசாமி, மங்கையர்கரசி ஆகியோர் மட்டும் வெள்ளாங்கோயிலில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வர முருகன் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் பொறுப்பிலும், ஏற்கனவே பள்ளி கல்வித்துறை இயக்குநராக இருந்தபோதும் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை முதல் வெள்ளாங்கோயிலில் உள்ள ராமேஸ்வர முருகனின் பெற்றோர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் சின்னசாமி மற்றும் அவரது மனைவி மங்கையர்கரசி ஆகியோர் மட்டும் இருந்த நிலையில் கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் ஈரோடு அக்ரஹார வீதியில் உள்ள ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடை நம்பியின் வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அறிவுநடை நம்பிக்கு ஈரோடு கடைவீதியில் நகை கடை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளரின் பெற்றோர் மற்றும் மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருவது கோபி மற்றும் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளரின் உறவினர் வீடுகளில் விஜிலென்ஸ் ரெய்டு: கோபி, ஈரோட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: