அமித்ஷா அதிக சீட் கேட்டதால் திட்டம்போட்டு கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றினாரா எடப்பாடி பழனிசாமி: பரபரப்பு தகவல்கள்

சென்னை: அதிக சீட் கேட்டதோடு, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு தலா ஒரு சீட் கொடுக்க பாஜ முன் வந்துள்ளதால் திட்டம் போட்டு கூட்டணியில் இருந்து பாஜவை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிகிறது. இதனால் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதனால் தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ளன. இப்போதே நாடு முழுவதும் தேர்தல் ஜூரம் தொடங்கி விட்டது. பல்வேறு அணிகளாக பிரிந்திருந்த எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்றிணைந்து விட்டன. அவர்கள் இந்தியா என்ற பெயரில் கூட்டணியை தொடங்கியுள்ளனர். இந்தக் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பெரும்பாலான பெரிய மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவை.

இதனால் மக்களவை தேர்தல் வந்தால், அவர்கள் மாநிலங்களில் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். அப்படி வெற்றி பெற்றால் பாஜ கூட்டணி தோற்கும் நிலை உருவாகும். அதற்கெல்லாம் முக்கிய காரணம் கடந்த மக்களவை தேர்தலின்போது கூட்டணியில் இருந்த கட்சிகளை உடைத்து, அந்த மாநிலங்களில் பாஜ ஆட்சியை கொண்டுவர திட்டமிட்டதுதான் என்று கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக மகராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி, பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி அமைத்து போட்டியிட்டு பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலுக்குப் பிறகு அந்த கூட்டணியுடன் மோதல் போக்கை கடைபிடித்தது. தற்போது அந்தக் கட்சிகள், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதனால், இந்தியா கூட்டணிக்கு பலம் பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாமதமாக விழித்துக் கொண்ட பாஜ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக தங்களுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுடன் முன் கூட்டியே கூட்டணியை உறுதி செய்வது என்று முடிவு எடுத்துள்ளது. அதன்படி தென் மாநிலங்களில் பாஜ கூட்டணியில் இருக்கும் ஒரே கட்சி அதிமுகதான். மேலும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடியுடன் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 15ம் தேதி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டணியை இருவரும் இறுதி செய்வது குறித்து பேசியுள்ளனர். அதில் பாஜவுக்கு தமிழகத்தில் 14 தொகுதிகள் கண்டிப்பாக வேண்டும். புதுவையைப் பொறுத்தவரை பாஜ, என்ஆர்காங்கிரஸ்தான் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதனால் அங்கு பாஜதான் போட்டியிடும். அங்கு அதிமுக சிறிய கட்சிதான். தமிழகத்தைப் பொறுத்தவரை 14 தொகுதிகளில் பாஜ போட்டியிடும்.

அதில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரனுக்கு சிவkங்கை அல்லது மயிலாடுதுறை, ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு தேனி, கிருஷ்ணசாமிக்கு தென்காசி, பாரிவேந்தருக்கு பெரம்பலூர், ஏ.சி.சண்முக்ததுக்கு வேலூர் மற்றும் பாஜவுக்கு நீலகிரி, கோவை, கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்பட 9 தொகுதிகள் வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இதுதான் எங்கள் முடிவு. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்த எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பாக வந்ததுதான் அண்ணாமலையின் பேச்சு. ஜெயலலிதாவைப் பற்றி ஊழல் முதல்வர் என்று கூறியபோது கூட அமைதியாக இருந்து விட்டு தற்போது அண்ணாவைப் பற்றி சொன்னதும் கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றியதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு காரணம் தொகுதிப் பங்கீடுதான் என்று கூறப்படுகிறது. கூட்டணியில் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சேர்ப்பது எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. இப்போது தொகுதி கொடுப்பார்கள். பின்னர் கட்சியில் சேர்த்து பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பார்கள். இவ்வாறு அதிமுகவுக்குள் பாஜ தலைவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எடப்பாடி கருதுகிறார். இதனால் கூட்டணியில் இருந்து வெளியேற சமயம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அண்ணாமலையின் பேச்சு வரப்பிரசாதமாக அமைந்து விட்டது. இதனால்தான் பாஜவை கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேற்றி விட்டதும் தெரியவந்துள்ளது. இதனால்தான் வழக்கம்போல ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரை வைத்து பேச வைத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆர்எஸ்எஸ் பிரமுகரும் பாஜ அமைப்புச் செயலாளருமான கேசவ விநாயகம், அண்ணாமலையை சந்தித்துப் பேசினார். அப்போது, அவரிடம் நான் வேண்டுமானாலும் ராஜினாமா செய்கிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அதற்கு கேசவ விநாயகம், தேவையில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இருவரும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில ரகசிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் அதிமுக அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் பதிலடியை பாஜ தொண்டர்கள் கொடுத்து வருகின்றனர். டிவிட்டர், போஸ்டர் என்று பதிலடி கொடுக்கின்றனர்.

* அதிமுக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ்
டிடிவி தினகரனுக்கு சிவகங்கை அல்லது மயிலாடுதுறை, ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு தேனி, கிருஷ்ணசாமிக்கு தென்காசி, பாரிவேந்தருக்கு பெரம்பலூர், ஏ.சி.சண்முகத்துக்கு வேலூர் மற்றும் பாஜகவுக்கு நீலகிரி, கோவை, கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 9 தொகுதிகள் வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். தொகுதிப் பங்கீடு பிரச்னைதான் எடப்பாடியின் முழு கோபத்துக்கு காரணம்.

The post அமித்ஷா அதிக சீட் கேட்டதால் திட்டம்போட்டு கூட்டணியில் இருந்து பாஜவை வெளியேற்றினாரா எடப்பாடி பழனிசாமி: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: