கொள்ளிடம் அருகே மயானத்துக்கு சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்: வனத்துறையினர் அதிரடி


கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியில் காடுவெட்டி கிராமம் உள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள இந்த கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையிலிருந்து மயானத்துக்கு பாதை செல்கிறது. சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள மயான கொட்டகைக்கு செல்ல சிமென்ட் சாலை மற்றும் சாலை ஓர தடுப்புச்சுவர் அமைப்பதற்கு பதினைந்தாவது நிதிக் குழு மானியம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அளக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் நேற்று பணி துவங்கியது. இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த வனக்காப்பாளர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் இந்த இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்றும், வனத்துறையின் அனுமதி இல்லாமல் இங்கே சாலை அமைக்க கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர்.

இதனால் பணி நடைபெறுவது நிறுத்தப்பட்டது. இதுகுறித்து காடுவெட்டி கிராம மக்கள் கூறுகையில், மயானத்துக்கு செல்ல முன்பு இருந்த தார் சாலை மிகவும் மோசமாகி விட்டது. இதனால் கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்று சிமென்ட் சாலை மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விட்டனர். சாலை பணி தொடர்ந்து நடைபெற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post கொள்ளிடம் அருகே மயானத்துக்கு சாலை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்: வனத்துறையினர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: