நாளை முதல் தங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் காரையாறு கோயிலுக்கு சென்ற வாகனங்கள் திடீர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

வி.கே.புரம்: பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பிரசித்திப் பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா, வருகிற 16ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாளை (14ம் தேதி) முதல் 18ம் தேதிவரை அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்துடன் குடில் அமைத்து தங்கி பூக்குழி இறங்குதல், கிடா வெட்டுதல் என பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தி வழிபாடு செய்வார்கள். அனுமதிக்கப்பட்ட நாட்களில் அரசு பேருந்துகளில் செல்லலாம். தனியார் வாகனங்களில் கோயிலுக்கு செல்ல அனுமதியில்லை. இந்நிலையில் பக்தர்கள் குடில் அமைப்பதற்காகவும், தங்களுக்கு தேவையான சாமான்களை கொண்டு செல்வதற்காகவும் தனியார் வாகனங்களை வனத்துறையினர் அனுமதித்தனர்.

நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தங்கள் வாகனங்களில் காரையாறு கோயிலுக்கு பொருட்களை கொண்டு சென்றனர். அப்போது, குடில் கட்டுவதற்காக கொண்டு வந்த கம்புகளை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் தங்கும் குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளதால் கம்புகளை கீழே இறக்கி வைத்து விட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனிடையே நேற்று காலையில் மலை மீது சென்ற வாகனங்கள் கீழே இறங்கவில்லை என தெரிகிறது. இதனால் மதியம் 1.30 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை வாகனங்களை கோயிலுக்கு வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து பணிமனை வரை வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி சதீஷ்குமார், வி.கே.புரம் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பக்தர்களை கோயில் வளாகத்தில் இறக்கி விட்டு வாகனங்கள் மலையில் இருந்து கீழே இறங்கி விட வேண்டும். கோயிலில் தங்குவதற்கு நேற்று (12ம் தேதி) அனுமதியில்லை என்று கூறினர். தொடர்ந்து கோயிலுக்கு பக்தர்களுடன் பொருட்களை ஏற்றிக் கொண்டு வாகனங்கள் சென்றன. இந்த வாகனங்கள் நேற்று மாலையே கீழே இறங்கின. நாளை (14ம் தேதி) முதல் கோயிலில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாக குடில்: கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக குடில்கள் அமைக்கப்பட்டு வாடகைக்கு விடப்படுகிறது. இதனால்தான் குடில் கட்டுவதற்காக பொருட்களுடன் சென்ற வாகனங்களை நேற்று அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.

நூதன முறையில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்
காரையாறு கோயிலுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை தீவிர சோதனைக்கு பிறகு வனத்துறையினர் அனுமதித்தனர். அப்போது ஒரு காரில் நூதன முறையில் டயரில் 10க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

The post நாளை முதல் தங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் காரையாறு கோயிலுக்கு சென்ற வாகனங்கள் திடீர் நிறுத்தம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு appeared first on Dinakaran.

Related Stories: