பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி தாய், மகள் கல்லூரியில் சேர முடிவு

*நெமிலி அருகே மக்கள் பாராட்டு

நெமிலி : நெமிலி அருகே பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற தாய், மகள் இருவரும் கல்லூரியில் சேர முடிவு செய்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பெரும்புலிம்பாக்கத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (49), கூலித்தொழிலாளி. இவரது மனைவி நாகவேணி(35). இவரது மகள் பத்மலோஷினி(17). இவர் பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வை தாய், மகள் இருவரும் எழுதினர். நாகவேணி தனித்தேர்வராக தேர்வு எழுதினார். கடந்த 6ம் தேதி வெளியான தேர்வு முடிவில் பத்மலோஷினி 511 மதிப்பெண் பெற்றும், தாய் நாகவேணி 386 மதிப்பெண்கள் பெற்றும் வெற்றிபெற்றனர்.

இதுகுறித்து மாணவி பத்மலோஷினி கூறியதாவது:எனது அம்மா கடந்த 2002ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நான் 11ம் வகுப்பு படிக்கும்போது எனது தாயும் 11ம் வகுப்பு படிப்பை மேற்கொள்ள முடிவு செய்தார். இதனால் தனி தேர்வு மையம் மூலம் பதிவு செய்து. எனக்கு பள்ளியில் கற்பிக்கும் பாடங்களை எனது தாய்க்கும் வீட்டில் தினமும் நான் கற்றுக்கொடுத்து, கடந்த ஆண்டு 11ம் வகுப்பு தேர்வு எழுத வைத்தேன்.

இதில் எனது அம்மா 372 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினோம். இதில் நான் 600க்கு 511 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். எனது அம்மா 386 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து நாங்கள் இருவரும் கல்லூரியில் சேர உள்ளோம். நான் படிக்கும் கல்லூரியில் எனது தாயும் சேர்க்க உள்ளேன். இவ்வாறு அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

தாயும் மகளும் ஒன்றாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்ல இருப்பதை அப்பகுதிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.
மேலும் சுந்தரமூர்த்தியின் மகன் மோகனரங்கன்(15), தற்போது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.

The post பிளஸ் 2 தேர்வில் ஒன்றாக தேர்ச்சி தாய், மகள் கல்லூரியில் சேர முடிவு appeared first on Dinakaran.

Related Stories: