பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில் மின்சார வசதியின்றி மண் விளக்கு ஒளியில் படிக்கும் 6ம் வகுப்பு சிறுமி

*கழிப்பறையும் இல்லாததால் அவதி

பல்லடம் : பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில் ஒரு வீட்டில் மின்சார விளக்கு இன்றி மண் விளக்கு ஒளியில் ஒரு சிறுமி 6ம் வகுப்பு படித்து வருகிறார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம், கண்டியன்கோயில் ஊராட்சி பெரியாயிபட்டி கிராமம் பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே உள்ள ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பழனிசாமி(60). இவரது மனைவி லதா. இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த பழனிசாமி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பக்கவாதத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளார்.

தனது பெரிய மகளுடன் திருப்பூரில் உள்ள வீட்டில் பழனிச்சாமி வசிக்கும் நிலையில் லதா, 17 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மகள் வளர்மதி, 11 வயதான வைஷ்ணவி ஆகிய மகள்கள் மற்றும் 3 வயது மகனுடன் பெரியாயிபட்டி குடிசை வீட்டில் வசிக்கிறார்.இதில் வைஷ்ணவி கண்டியன்கோவில் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் பிய்ந்து போன குடிசை வீட்டில் மிகவும் ஏழ்மை நிலையில் வசிக்கின்றனர். மழை பெய்தால் ஒழுகும் தகரம் வேயப்பட்ட குடிசை, தென்னை ஓலைகளை வைத்து கட்டப்பட்ட இடுப்பு உயரம் மட்டுமே உள்ள கழிப்பறை என இவர்கள் பல கஷ்டங்களுக்கு இடையில் வசித்து வசிக்கின்றனர்.

வைஷ்ணவி படிப்பதற்கு மின்சார விளக்கு வசதி இல்லாததால் மண் விளக்கு ஒளியில் பள்ளி பாடங்களை படித்து வருகிறார். மழை பெய்ந்தால் ஓட்டை வீடு ஒழுகுகிறது, வீட்டுக்குள் பாம்பு, பூச்சி எல்லாம் வருகிறது. கழிப்பறையும் தடுப்பு ஓட்டையாக இருக்கிறது. போதிய உயரம் இல்லாமல் உள்ளது.

இது குறித்து லதா மற்றும் வைஷ்ணவி கூறியதாவது: எங்களுக்கு வீடு கட்டி தந்து அதில் மின்சார வசதி, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் என்றனர். இவர்களது கோரிக்கையை அந்த ஊர் பொதுமக்களும் ஆதரித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பல்லடம் பெரியாயிபட்டி கிராமத்தில் மின்சார வசதியின்றி மண் விளக்கு ஒளியில் படிக்கும் 6ம் வகுப்பு சிறுமி appeared first on Dinakaran.

Related Stories: