பழநி கோயில் பகுதியில் ஹெலிகேமராக்கள் பறக்க தடை விதிக்க வேண்டும்

*பக்தர்கள் கோரிக்கை

பழநி : பழநி கோயில் பகுதியில் ஹெலிகேமராக்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தவிர, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நாட்களில் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகின்றனர்.

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் முதலிடத்தில் உள்ளது. இக்கோயிலில் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்லும் வின்ச் நிலையம், ரோப்கார் நிலையம், யானைப்பாதை மற்றும் படிவழிப்பாதைகளில் டோர் டிடெக்டர் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோயிலில் பக்தர்கள் கொண்டு வரும் பொருட்களை பரிசோதிப்பதற்காக மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் ஸ்கேனிங் இயந்திரங்கள் போன்றவை உள்ளன.

இந்நிலையில், தற்போது பழநி கோயிலை அடிக்கடி வட்டமடிக்கும் தனியார் ஹெலிகேமிராக்கள் புதிய அச்சுறுத்தலாக மாறி உள்ளன. திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வரும் தனியார் புகைப்படக்காரர்களால் எடுக்கப்படும் இந்த வீடியோ பதிவுகள், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் உலாவிடப்படுகின்றன. இதுபோன்ற பதிவுகள் சமூக விரோதிகளின் கைகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.

கோயிலின் அமைப்பு முறை, கண்காணிப்பு உள்ள இடம், பக்தர்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடம், குறைவாக உள்ள இடம், மாடிகளுக்கு செல்லும் வழி போன்றவை ஹெலிக்கேமிராக்கள் மூலம் தெரியும் சூழல் உண்டாகி உள்ளது. எனவே, கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பழநி கோயிலின் சுற்றுப்புறப்பகுதிகளில் ஹெலிகேமிராக்கள் பறக்க தடை விதிக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி கோயில் பகுதியில் ஹெலிகேமராக்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: