அன்புநகர் திரும்ப ‘ஒய்’ வடிவ மேம்பாலம் இல்லாததால் வரலாற்றுப் பிழையானது மகராஜநகர் ரயில்வே கேட்டில் சுரங்கப் பாதை இல்லாமல் திணறல்

*உழவர்சந்தைக்கு செல்லும் விவசாயிகள், பொதுமக்கள் அவதி

நெல்லை : மகராஜநகர் ரயில்வே கேட்டிற்கு மாற்றாக மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில், கேட் பூட்டப்பட்டதால் சுரங்கப்பாதை வசதியின்றி வியாபாரிகள், பொதுமக்கள் திணறுகின்றனர். அன்பு நகருக்கு செல்லும் வழியில் ஒய் வடிவ மேம்பாலத்திற்கு திட்டம் போடாததால் வரலாற்றுப் பிழையாகி விட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பாளையில் இருந்து சிவந்திப்பட்டி செல்லும் சாலையில், தியாகராஜநகர்- மகராஜநகர் இடையே நெல்லை- திருச்செந்தூருக்கான ரயில்வே கிராசிங் செல்கிறது. இந்த கிராசிங்கில் ரயில்வே கேட் காலை, மாலை என முக்கியமான நேரங்களில் பூட்டப்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாயினர். இதையடுத்து அங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த பாலப்பணிகள் துவங்கும்போது, அதை ஒய் வடிவில் அமைத்து அன்புநகர் செல்லும் சாலைக்கும் தனி மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் அன்புநகரை மறந்துவிட்டு, மகராஜநகர்- தியாகராஜநகர் இடையே ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது வரலாற்றுப் பிழையாகிப் போது. மகாராஜநகர் – தியாகராஜநகர் போக்குவரத்து மேம்பாலத்தின் மூலம் சிக்கல் இன்றி தொடர்ந்து வரும் நிலையில், ரயில்வே கேட்டை அடுத்துள்ள அன்புநகருக்கு திரும்புவது எப்படி என்பது தான் பொதுமக்கள் எழுப்பும் கேள்வி. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்ட உடன் ரயில்வே துறையினர் கேட்டை அடைத்துவிட்டனர். அதன் பின்னர் அங்கு சுரங்கபாதை அமைக்க போகிறோம் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அதற்கான எவ்வித பணிகளும் நடக்கவில்லை. கடந்த 2 மாதங்களாக மகாராஜநகர் ரயில்வே கேட் பூட்டிக் கிடப்பதால், அன்பு நகர் மற்றும் பெருமாள்புரம் பகுதிகளில் இருந்து மகாராஜநகர் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அப்பகுதி மக்கள் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, உழவர் சந்தை, வி.எம்.சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு சர்வீஸ் சாலை வழியாக சென்று மேம்பாலத்தில் பயணித்து மீண்டும் சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் சர்வீஸ் சாலையில் ஏற திரும்பும் போதும், இறங்க திரும்பும் போதும் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உருவாகிறது.

ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை இல்லாத நிலையில், மகராஜநகர் உழவர் சந்தையிலும் முன்பு போல் வியாபாரம் இல்லை என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரயில்வே கேட் அடைக்கப்பட்டு விட்டதால், காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகள் தொடங்கி, நுகர்வோர்களும் அங்கு செல்ல தயங்குகின்றனர். அன்புநகரில் இருந்து உழவர் சந்தைக்கு பைக்கில் வருவோர் அரைகிமீ தொலைவுக்கு சுற்றி, தியாகராஜநகர் மேம்பாலத்தில் ஏறி, மீண்டும் மகராஜநகர் வருகின்றனர்.

மகராஜநகர், ஹைகிரவுன்ட் பகுதிகளில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையம் செல்வோரும், இப்போது ஆள் அரவமற்ற ரயில்வே பீடர் சாலையில் செல்ல வேண்டியதுள்ளது. இருள் சூழ்ந்து காட்சியளிக்கும் அந்த சாலையில் இரவு நேரங்களில் செல்லவே பயமாக உள்ளது என பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.ரயில்வே கேட் பூட்டப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அனைவருமே ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால் மகராஜநகர் உழவர் சந்தையில் இருந்து வெளியே வரும் வாகன ஓட்டிகள் இடது பக்கமாக திரும்பி, திடீரென மேம்பாலத்தில் ஏற முற்படுகின்றனர். இதனால் மேம்பாலத்தில் அடிக்கடி சிறுவிபத்துகளும் நடந்து வருகின்றன. பாலத்தில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள், அதன் பக்கவாட்டில் இருந்து உள்ளே நுழையும் வாகனங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றன.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை போக்குவரத்து கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் வரையில் ரயில்வே கேட்டை திறந்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும் ரயில்வே துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உழவர் சந்தையில் குறையும் கூட்டம்

இதுகுறித்து மகராஜநகர் உழவர்சந்தை விவசாயிகள் கூறுகையில், ‘‘உழவர்சந்தையின் வியாபாரம் அதிகாலையில்தான் அமோகமாக இருக்கும். பைக்கில் வருவோரை மட்டுமே நம்பி எங்கள் வியாபாரம் இருப்பதில்லை. அன்புநகர், தியாகராஜநகர், பெருமாள்புரம் பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலரும், காலை பொழுதில் உழவர்சந்தைக்கு நடந்து வந்து காய்கறிகளை வாங்கிவிட்டு வாக்கிங்காக செல்வது வழக்கம்.

இப்போது ரயில்வே கேட் அடைப்பட்டு கிடப்பதால், அவர்கள் இந்த பக்கமே தலைக்காட்டுவதில்லை. மகராஜநகர் பகுதியில் வாக்கிங் வருவோர் மட்டுமே உழவர்சந்தைக்கு வருகின்றனர். ரயில்வே கேட் இவ்விரு பகுதிகளையும் தனித்தனியே இப்ேபாது பிரித்துவிட்டது. எனவே ரயில்வே கேட்டை கடந்து செல்ல விரைவில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும்’’ என்றனர்.

The post அன்புநகர் திரும்ப ‘ஒய்’ வடிவ மேம்பாலம் இல்லாததால் வரலாற்றுப் பிழையானது மகராஜநகர் ரயில்வே கேட்டில் சுரங்கப் பாதை இல்லாமல் திணறல் appeared first on Dinakaran.

Related Stories: