ஹைவேவிஸ் தேயிலை தோட்டங்களில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

*அச்சத்தில் தொழிலாளர்கள்

சின்னமனூர் : ஹைவேவிஸ் தேயிலை தோட்டங்களில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வரிசையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் சில்வர் குடுசு, ஆனந்தா எஸ்டேட், கலெக்டர் காடு, மேகமலை, மணலார், மேல் மணலார், வெண்ணியார், மகராஜன் மெட்டு, இரவங்கலார் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

இங்கு தேயிலை, ஏலம், மிளகு, காபி என வெளிநாடுகளுக்கு செல்லும் பணப் பயிர்கள் தொடர் விவசாயம் நடந்து வருகிறது. 7 மலை கிராமங்களில் 8,500க்கு மேல் பொதுமக்கள் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இந்த ஏழு மலை கிராமங்களை சுற்றி ஹைவேவிஸ், மணலார், வெண்ணியார், தூவானம், இரவங்கலார் என ஐந்து அணைகளும் ஐந்து அணைகளை சுற்றி நீண்ட ஏரிகளும் உள்ளன.

இங்கு 1.50 லட்சம் ஏக்கர் அளவில் பரந்த அடர்ந்த வனப் பகுதியாகவும் இருப்பதால் வான் உயர்ந்த மரங்களின் குடைகளுக்குள் யானைக் கூட்டங்கள், வரி புலிகள், சிறுத்தைகள் மற்றும் கருஞ்சிறுத்தை,காட்டு மாடுகள், வரி குதிரைகள், கரடிகள், அரியவகை பாம்புகள், அரியவகை பறவைகள் என பல உயிரினங்கள் வாழ்கின்றன.மேலும் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருக்கும் தேயிலை தோட்டம் பகுதிகளில் அடிக்கடி இந்த வன விலங்குகள் வருவது வழக்கமாக இருக்கிறது.

குறிப்பாக வனங்களில் இரை தேடிவிட்டு தேயிலைத் தோட்ட பகுதிகளில் சுற்றி இருக்கும் அணை மற்றும் ஏரிப் பகுதியில் யானை கூட்டங்கள் தண்ணீர் குடித்து தாகம் தீர்க்க அதிகமாக வருகிறது. அப்போது மணிக்கணக்கில் நின்று ஒன்று கொண்டு தும்பிக்கையால் உரசி கொண்டும் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டு விளையாடி விட்டு திரும்பும்.

முன்பு காட்டு யானைகள் அட்டகாசம் செய்த நிலையில் தற்போது காட்டு மாடுகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. தொடர்ந்து காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்ட பகுதியில் சுற்றி வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்நிலையில் திடீரென காட்டு மாடுகள் கொம்புகளால் குத்தி கிழித்து விடும் அபாயமும் இருக்கிறது.

ஏற்கனவே இப்பகுதியில் காட்டுமாடு, யானை தாக்குதலில் பல தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த பயம் காரணமாக தற்போது தொழிலாளர்கள் தேயிலைத் தோட்ட பகுதிகளுக்குள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலும் அச்சம் ஏற்பட்டிருப்பதால் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சின்னமனூர் வனத்துறையினர் மேற்படி மலை கிராமங்களுக்கு சென்று தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் காட்டு மாடுகளை அந்தந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஹைவேவிஸ் தேயிலை தோட்டங்களில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: