*500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு
மானூர் : மானூர் யூனியன் அலுவலகத்தை நெல்லை திருத்து கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மானூர் ஒன்றியம் பல்லிக்கோட்டை ஊராட்சியில் 4 குக்கிராமங்கள் உள்ளன. இதில் அலவந்தான்குளம், நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை போன்ற கிராமங்களுக்கு அலவந்தான்குளம் கிராமத்தின் கீழ்பகுதியிலுள்ள திறந்த வெளி கிணற்றிலிருந்து 7.5 குதிரை திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அலவந்தான்குளம் கிராமத்தில் மக்கள்தொகை அதிகம் என்பதால் அந்த கிணற்றிலிருந்து தனி மோட்டார் மற்றும் பைப்லைன் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் ஒன்றிய நிதியிலிருந்து ரூ.9.80 லட்சம் மதிப்பில் 10 எச்பி மோட்டார் மூலம் புதிய பைப் அமைக்கும் பணி கடந்த 3ம் தேதி தொடங்கியது. இதனை நெல்லை திருத்து கிராமத்தினர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அலவந்தான் குளம் கிராம மக்கள் மானூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த 3ம் தேதி போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சபாபதி பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் அலவந்தான்குளம் கிராமத்துக்கு தனியாக மோட்டார் போட்டு புதிதாக பைப்லைன் போடுவதற்கு அனுமதி கொடுத்த பிடிஓவை கண்டித்து நேற்று மதியம் 2 மணியளவில் மானூர் ஒன்றிய அலுவலகத்தை நெல்லை திருத்து கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தகவலறிந்த மானூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி, எஸ்ஐகள் கணேஸ்குமார், விஜய்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தி ஒன்றிய அலுவலகத்திற்குள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் ஒரிரு நாட்களுக்குள் மூன்று கிராமத்தினரையும் அழைத்து சமாதானமாக பேசி முடிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் சபாபதி கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட கிராமத்தினர் ஒருமணி நேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர். இதனால் மானூர் ஒன்றிய அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே ெநல்லை திருத்து ஊர் பொதுமக்கள் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். அதில், நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான் குளம் ஊருக்கு பொதுவான கிணற்றில் உள்ள 7.50 எச்பி மோட்டருக்கு பதிலாக 10 எச்பி மோட்டார் போட்டு கூடுதலாக தண்ணீர் கொடுப்பதற்கு வார்டு உறுப்பினர்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலரிடம் 10 எச்பி மோட்டார் வைப்பதற்கு அனுமதி வழங்கி விட்டு பஞ்சாயத்தில் தீர்மானமே இல்லாமல் அலவந்தான் குளத்தில் தனியாக மோட்டார் போட்டு புதிதாக பைப் லைன் போடுவதற்கு அனுமதி கொடுத்ததாக புகார்
கூறப்பட்டுள்ளது.
The post மானூர் யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.
