காவிரி நீர் பிரச்னையில் ஓரிரு நாட்களில் முடிவு: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் நேற்று முன்தினம், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை கொடுத்தார். அதோடு தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதன் பின்பு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, அமைச்சர் துரைமுருகன் சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கடந்த 5ம் தேதியே டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து, தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். தண்ணீரை சரியாக காவிரியில் விடவில்லை என்றால், அல்லது 2 மாநிலங்களிலும் நீர் பற்றாக்குறை இருந்தால் கூட, இருக்கும் நீரை எப்படி பங்கிட்டுக் கொள்வது என காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்த உத்தரவிடுங்கள் என்று கூறுவதற்கு தான், கடந்த 5ம் தேதி டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தோம்.

இதற்காக தான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது, ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டு நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கடிதத்தையும் கொடுத்து, சூழ்நிலையை விளக்கினேன். அவரும் புரிந்துகொண்டு, ஓரிரு நாட்களில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளை கூப்பிட்டு, இருக்கக்கூடிய நீரை எப்படி பங்கிட்டு வழங்க வேண்டும், அதனை விரைவில் வழங்குங்கள் என்று, நான் உத்தரவிடுகிறேன் என தெரிவித்தார். எனவே அந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கையை செயல்படுத்தினால், தஞ்சை போன்ற டெல்டா பகுதிகளில் பயிர்கள் காப்பாற்றப்படும்.

நாம் நேரடியாக கர்நாடக மாநில அரசிடம் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று சிலர் கேட்கின்றனர். அவர்கள் தெரியாமல் அதேபோல் கூறுகின்றனர். நாம் நேரடி பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. பேச்சுவார்த்தை பேசி பயனில்லை. எங்களுக்கு நடுவர் மன்றம் வேண்டுமென்று கேட்டு, நாம் அதன் மூலம் தான் சாதித்தோம். நாம் மீண்டும் நேரடி பேச்சு வார்த்தைக்கு சென்றோம் என்றால், நாம் நாளை எந்த நீதிமன்றத்துக்கும் போக முடியாது. சில அதி புத்திசாலிகள், முதல்வர் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நேரடியாக கடிதம் எழுத வேண்டியது தானே என்று கேட்கின்றனர். முதலமைச்சர் பிரதமருக்கு தான் கடிதம் எழுதுவார். இப்போது நிலைமையின் அவசியம் கருதி, ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு முதல்வர் கடிதம் எழுத வேண்டும் என்று கூறுவது புத்திசாலித்தனமான பேச்சு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

* பிரதமர் தற்போதுதான் வாய் திறந்திருக்கிறார்
மணிப்பூர் கலவரம் தொடர்பான கேள்விக்கு, ‘‘பிரதமர் மோடி வாய் திறந்ததோடு நில்லாமல், விரைவில் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் தற்போது தான் வாய் திறந்து இருக்கிறார். மணிப்பூர் கலவரம் கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது. மணிப்பூர் பெரிய மாநிலம் அல்ல. சின்ன மாநிலம் தான். அதனை முன்கூட்டியே அறிந்து சரி செய்து இருக்க வேண்டும்’’ என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

The post காவிரி நீர் பிரச்னையில் ஓரிரு நாட்களில் முடிவு: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: