புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் ரூ.13.07 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடங்கள் மற்றும் ரூ.3.42 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட 7 மகளிர் விடுதிக் கட்டிடங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் கூடுவாஞ்சேரி மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் ரூ.13 கோடியே 7 லட்சத்து 27 ஆயிரம் செலவில் 226 மகளிர் தங்கும் வகையில் 2 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், 2 புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடங்கள் மற்றும் அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் ரூ.3 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் செலவில் புதுப்பிக்கப்பட்ட 7 விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார். பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கிட ‘தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்’ தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு, புதிய விடுதிகளை கட்டுதல், பழைய விடுதிகளை புதுப்பித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. பயன்பாட்டிற்கு வரும் இத்தங்கும் விடுதிகளில் தங்குவதற்கு www.tnwwhcl.in என்ற இணையதளத்தின் மூலம் பணிபுரியும் மகளிர் விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பணிபுரியும் மகளிர் விடுதி கட்டிடங்கள் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: