மூணாறு : கேரள மாநிலம் மூணாறில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் கழிவுகளால் நிரம்பி வழிகின்றது. இதற்கு அரசு உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கேரள மாநிலம் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களுள் ஒன்றாகும். இது சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்குகிறது. மூணாறுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆறுகள் கழிவுகளால் நிரம்பி வழிகின்றது.
மூன்று ஆறுகள் (நல்லதண்ணி ஆறு,கன்னிமலை ஆறு,குண்டலை ஆறு) சங்கமிக்கும் இடம் தான் மூணாறு. இது கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் மிக ரம்மியமான இயற்கை அழகை கொண்டுள்ளது. மூணாறின் இதயம் என்று சொல்லக்கூடிய முத்திரப்புழை ஆற்றின் கரையும்,தெளிந்த நீரும் ஆரம்ப காலத்தில் மிக ரம்யமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் மூணாறு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக மாறியதாலும், வணிக நிறுவனங்கள் பெருகியதாலும், முத்திரபுழை ஆற்றங்கரையில் கழிவுகள் குவியத் தொடங்கின.
ஆறுகளின் நிறம் மாறி கழிவுகளால் நிரம்பி வழிகின்றது முதிரப்புழை ஆறு. கடந்த 20 ஆண்டுகளில் திட-திரவ-ரசாயனக் கழிவுகளின் ஓடை என்று சொல்லும் நிலைக்கு மாறியுள்ளது முதிரப்புழை ஆறு. மேலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்ததோடு டன் கணக்கில் தேங்கிய கழிவுகளை அகற்ற ஊராட்சியின் தலைமையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், கடுமையான விதிகள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன.
மேலும் தொலைநோக்கு பார்வை இல்லாமல் கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதும் ஆறுகள் அழிவிற்க்கு காரணமாக அமைகிறது. இன்று மீண்டும் ஒரு உலக சுற்றுச்சூழல் தினம் கடந்து போகும் போதும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் கழிவுகளால் நிரம்பி வழிகின்றது. இதற்கு அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என்று பொது ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நல்லதண்ணி ஆறு, கன்னிமலை ஆறு, குண்டலை ஆறு சங்கமிக்கும் மூணாறில் நித்தம் நிரம்பி வழியும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.