கோடை விடுமுறையால் களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

களக்காடு: கோடை விடுமுறையால் களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்தினருடன் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் தலையணை நீர்வீழ்ச்சி உள்ளது. வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி, அதிக குளிர்ச்சியுடன் ஓடி வருவதால் இதில் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் இப்பகுதி யில் கோடை வெயில் கொளுத்தி வந்ததால் தலையணையில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் விழாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். மே மாத முதல் வாரத்தில் பெய்த கோடை மழையால் தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டியது.

தற்போது ஓரளவு தண்ணீர் வரத்து உள்ள நிலையில், கோடை விடுமுறை காரணமாக தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். இதனால் சிறுவர் பூங்கா, சோதனை சாவடி, ஆற்றுப்பகுதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் தலையணையில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது. வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The post கோடை விடுமுறையால் களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: