தமிழக அரசின் எதிர்ப்பால் டெல்டாவில் 3 நிலக்கரி சுரங்கம் திட்டம் ரத்து: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு நேற்று அறிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் புதிதாக 3 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருந்தது. மாநில அரசின் கருத்துக்களை கேட்காமல் இந்த முடிவை ஒன்றிய அரசு எடுத்திருந்தது. இந்த முடிவை கைவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், தமிழகத்தில் நிலக்கரி சுரங்க விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதினார். முதல்வரின் கடிதத்தை எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு, நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து அளித்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளும் போராட்டத்தை தொடங்கினர். மேலும், சட்டப்பேரவையில் திமுக சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும்போது, ‘டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது’ என்று அறிவித்தார். அதை தொடர்ந்து, நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அடுத்து திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டெல்டா மாவட்டங்களில் புதியதாக 3 இடங்களில் சுரங்கம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு ஒன்றிய அரசு பணிந்து, தனது திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

The post தமிழக அரசின் எதிர்ப்பால் டெல்டாவில் 3 நிலக்கரி சுரங்கம் திட்டம் ரத்து: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: